ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு நிதி திரட்டிய வழக்கு தொடர்பாக டெல்லி தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மண்ணடி இப்ராஹீம் 1வது தெருவில் உள்ள தனியார் இல்லத்தில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்ட சாதிக் பாஷாவுக்கு சொந்தமான தற்காப்பு மையத்திலும் சோனை நடைபெற்றது. சோதனை நடைபெற்றுவரும் சில இடங்களில் தடை செய்யப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே வழக்கில் தொடர்புடைய இர்பான் என்பவரது மாமனார் வீடு காரைக்கால் புதுத்துறை சுண்ணாம்பு கார தெருவில் உள்ளது. இங்கு இன்று அதிகாலை சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணப்பரிவர்த்தனை ஆவணங்கள், பென்டிரைவ்கள், லேப்டாப்புகள் உள்ளிட்டவை புலனாய்வு அதிகாரிகள் முழுமையாக சோதனை செய்தனர். தங்களுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தடயங்கள் குறித்து புலனாய்வு அதிகாரிகள் வீட்டில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனர். எந்த வழக்கு தொடர்பான சோதனை என்பது குறித்து அதிகாரிகள் எதையும் தெரிவிக்கவில்லை.

இதேபோல், மயிலாடுதுறையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். மயிலாடுதுறை அருகே நீடூரில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையதாக சாதிக் பாஷா என்ற இக்காமா பாஷா உட்பட 5 பேரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

 

இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட நபர்களின் உறவினர்களிடம் சில ஆவணங்களை காட்டி விளக்கம் கேட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நீடூர், எலந்தங்குடி, அரிவேலூர், கிளியனூர், உத்திரங்குடி ஆகிய ஐந்து இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னையிலிருந்து வந்திருந்த எஸ் பி ஸ்ரீஜித் தலைமையில் அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து தனித்தனியாக சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட 9 இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சில இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், இவர்களோடு வேறுயாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.