சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாக அக்டோபர் 2-ம் தேதி அனுமதி கோரப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விசிக மனித சங்கிலிப் போராட்டத்துக்கு அனுமதி வழங்க மறுத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு விதிகளுக்குட்பட்டு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் சார்பில், காவல் ஆணையர் அலுவலகத்தில், அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். மேலும், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து ஒருங்கிணைக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும்படி திருமாவளவன் அனைத்து அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று,பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் மனித சங்கிலிப் போராடத்தில் பங்கெடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தன.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை எதிர்தது திருமாவளவன் தொடர்ந்த வழக்கை விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்தநிலையில், “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட சூழலில், இதனை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் கண்டன போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள், சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. அதேபோல், சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் என்ற பெயரில் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் அனுமதி கோரியுள்ளனர்.

மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினர் இரவுபகல் பாராமல், பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின் காரணமாக அக்டோபர் 2-ம் தேதியன்று அனுமதி கோரப்பட்டுள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலி போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.