புதுடெல்லி: ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மக்களவை செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இச்சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பின்னர், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதா’ உருவாக்கப்பட்டு, அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டது. பிறகு, இந்த மசோதா கடந்த அக்.1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, ஆளுநரும் ஒப்புதல் அளித்து சட்டம் அமலானது. இந்த சட்டப்படி, தமிழகத்தில் பணத்தையோ, வேறு ஏதேனும் பொருளையோ வைத்து, ஆன்லைன் மூலம் நடைபெறும் சூதாட்டங்கள், விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பணம் வைத்து ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் 3 மாதங்கள் வரை சிறை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.
இதையடுத்து, அக்டோபரில் நடந்த சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரில், ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டத்துக்கு மாற்றாக, அக்.19-ம் தேதி சட்ட மசோதாவை அமைச்சர் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தார். அந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து, அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழக அரசு அளித்தது. பிறகு, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிச.2-ம் தேதி ஆளுநரை சந்தித்து, வலியுறுத்தினார். இதற்கிடையே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநர் ரவி, சந்தித்துப் பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது.
சட்டம் இயற்றி 5 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார். இந்நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட 8 கேள்விகளை எழுப்பியுள்ள ஆளுநர், மசோதாவில் போதிய தரவுகளை சேர்த்தும், சில திருத்தங்களை செய்தும் அனுப்புமாறு தெரிவித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறியிருந்தன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நாளை (மார்ச்13) பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்களவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மத்திய மின்னணு மற்றும் ஐடி துறை அமைச்சர் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த கடிதத்தில், தமிழகத்தில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தினால், அதிகமான பணத்தை இழந்த 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.