கடந்த 74 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், இலங்கை அரசு கடும் நிதி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், காஸ், மின்சாரம், உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், விலைவாசியும் கடுமையாக ஏறி உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வருகின்றனர். இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள தீர்மானத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸா கையெழுத்திட்டார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவும் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இலங்கை அதிபருக்கான அதிகாரங்களை குறைப்பதற்கான தீர்மானமும் தாக்கல் செய்யப்படுகிறது.
கோத்தபய ராஜபக்சே மற்றும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானங்களுக்கு இலங்கையின் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் பதவி விலகக்கோரி மக்கள் போராடி வரும் நிலையில் தீர்மானமும் தாக்கல் ஆவதால் நெருக்கடி முற்றுகிறது. நெருக்கடி முற்றுவதை அடுத்து போராடுபவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே கூறியுள்ளார்.