உதகையில் மழையால் விழுந்த அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் 6 மாதங்களாகியும் இது வரை சீரமைக்கப்படாததால், சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கன மழையால், உதகை அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் சேதமானது.சுற்றுச்சுவரின் இடிபாடுகளும், மரங்களும் சாலையில் விழுந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக இயந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது. சுற்றுச்சுவர் இடிந்து 6 மாதங்கள் ஆனபோதும், இதுவரை சுவர் சீரமைக்கப்படவில்லை.சுற்றுச்சுவர் விழுந்த பகுதியில் தான் வெளி நோயாளிகள் பகுதி உள்ளது. வெளி நோயாளிகள் அந்த பகுதிக்கு வந்து நோயாளிகளுக்கான சீட்டு பெற்றுச் செல்ல வேண்டும்.
சுற்றுச்சுவர் விழுந்த நிலையில்,யாரும் அப்பகுதியில் நடமாடக்கூடாது என தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால், வெளி நோயாளிகள், சீட்டு பெற அப்பகுதிக்கு பெரும்சிரமத்துக்கு இடையே வந்து செல்கின்றனர்.
முதியவர்கள் மற்றும்மாற்றுத்திறனாளிகள் நோயாளிகள் சீட்டு பெற கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், சுவரின் இடிபாடுகள் அப்பகுதியிலேயே சாலையோரத்தில் உள்ளதால் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக மாறியுள்ளது. இந்தசுற்றுச் சுவரை உடனடியாக சீரமைக்கவேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.