அண்மைக்காலமாக நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் யாரையும் சந்திப்பதில்லை. சிறிது காலம் ஓய்வும் தனிமையும் தேவைப்படுவதால், அவர் திரைப்பட வேலைகளையும் ஒத்திவைத்துள்ளது, அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரிய வருகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கவுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக பல இயக்குநர்கள் தங்களுடைய கதைகளைக் கூறியுள்ளனர். ஆனால், எந்த இயக்குநர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பது இறுதிச் செய்யப்படவில்லை.

இதனிடையே, கடந்த மாதம் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரஜினிக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இது தொடர்பாக பலரும் தன்னிடம் பேசுவார்கள் என்று நினைத்தார்.

இதற்காக தனுஷ் – ஐஸ்வர்யா இருவருடைய அறிவிப்புக்குப் பிறகு முழுமையாகத் தனிமையிலேயே தனது நேரத்தைச் செலவிட்டு வருகிறார். மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே, சிலசமயங்களில் பேசியுள்ளார்.

ரஜினியிடம் கதைகளைக் கூறியுள்ள இயக்குநர்கள், தங்களுடைய கதைகளை மெருகேற்றிய விஷயங்களைக் கூறுவதற்காகத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அப்போது, இப்போதைக்கு யாரையும் சந்திக்க விரும்பவில்லை. சில நாட்கள் கழித்து நாங்களே தொடர்பு கொள்கிறோம் என்று ரஜினி தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.