கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பந்தை பார்க்க ரசிகர்கள் யாரும் மருத்துவமனை வர வேண்டாம் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு காரில் சென்றபோது, முகம்மதுபூர் ஜாட் பகுதியில் விபத்து ஏற்பட்டது. அப்போது, சாலையின் மையத்தடுப்பில் மோதிய கார், தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரின் ஜன்னலை உடைத்து வெளியே குதித்த ரிஷப் பந்த், நூலிழையில் உயிர் தப்பினார்.
இதனையடுத்து அவர் தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்-க்கு நெற்றியில் இரு இடங்களில் வெட்டுக்காயம், வலது கால் மூட்டு, வலது கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனிடைய, பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் அனுபம் கெர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ரிஷப் பண்ட்-ஐ சந்தித்தனர். மேலும், ரோகித் சர்மா உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் ரிஷப் பந்தி-ன் கண் புருவத்திற்கு மேல் ஏற்பட்ட காயத்துக்காக சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் உள்ள காயங்களுக்காக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மேக்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரிஷப் பந்தை பார்க்க மருத்துவமனைக்கு யாரும் வர வேண்டாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.
இது குறித்து பேசிய டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ஷ்யாம் சர்மா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பந்த் உடல்நலம் தேறி வருவதாகவும், பிசிசிஐ மருத்துவர்கள் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தொடர்ந்து பந்த் உடல் நலம் குறித்து கண்காணித்து வருவதாக கூறினார்.
ரசிகர்கள் பந்த் பார்க்க மருத்துவமனை வருவதால் அவருக்கு மேலும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் ரிஷப் பந்த் தனி விமானம் மூலம் டெல்லி அழைத்து வந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஷ்யாம் சர்மா தெரிவித்துள்ளார்.