சென்னையில் மெரினா கடற்கரை சாலை, ஜிஎஸ்டி சாலை, அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், ஆலந்தூர், வேளச்சேரி, வாணுவம்பேட்டை சந்திப்பு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து போலீஸார் சமீபகாலமாக வாகன சோதனைஎன்ற பெயரில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி பல்வேறு சந்திப்புகளில் வாகன ஓட்டிகளிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது: ‘‘பிரதான சந்திப்புகளில் ஒரே இடத்தில் சாலையின் இருபுறமும் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீஸார் நின்றுகொண்டு, அனைத்து வாகனங்களையும் ஓரங்கட்டுகின்றனர்.ஹெல்மெட், முகக்கவசம், வாகன ஓட்டுநர் உரிமம், வாகன காப்பீடு என ஒவ்வொன்றாக கேட்கின்றனர்.
ஆவணங்களை காண்பித்தாலும் சமாதானம் அடையாமல், அபராதம் விதித்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் செயல்படுகின்றனர். அனைத்து ஆவணங்களும் வைத்திருப்பவர்களிடம் ஒருமையில் பேசுகின்றனர்’’ என்று தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
காரில் வருபவர்களிடம், ‘‘முறையாக பெல்ட் அணியவில்லை’’ என்றும்,‘‘நீதிமன்ற உத்தரவை மீறி, கருப்பு பிலிம் ஒட்டியுள்ளீர்கள்’’ என்றும் கூறி நெருக்கடி தருவதாக கூறப்படுகிறது.கடந்த வாரத்தில் கப்பல் கேப்டன் ஒருவர் தனது மனைவி, குழந்தைகளுடன் காரில் சென்றுள்ளார். சோழிங்கநல்லூர் சந்திப்பில் அந்த காரை நிறுத்திய போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், ‘‘நீங்கள் மது அருந்தியிருக்கிறீர்கள் என வழக்கு பதிவு செய்யலாமா?’’ என்று கேட்டபடியே, காரின் கதவை திறந்து உள்ளே ஏறி உட்கார்ந்துகொண்டு, மாறி மாறி கேள்வி கேட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் வந்த கப்பல் கேப்டனுக்கு இது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக காவல் துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதை தெரிவித்துள்ளார். வேறொரு அதிகாரி அங்கு வந்த பிறகே, அந்த உதவி ஆய்வாளர் அங்கிருந்து நகர்ந்துள்ளார்.
‘‘வீட்டருகே காய்கறி, மீன், இறைச்சி வாங்கச் செல்வோர், பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வோர், பக்கத்து தெருவில் கடைக்கு செல்வோரைக்கூட மறிக்கின்றனர். சில இடங்களில், மறைவாக நின்றுகொண்டு, பாய்ந்தோடிச் சென்று வாகனங்களை மடக்குகின்றனர்.
இதனால், வாகன ஓட்டிகள் பதற்றம் அடைந்து, விபத்தில் சிக்கும் ஆபத்தும் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் கெடுபிடி மேலும் அதிகரிக்கிறது’’ என்று இளைஞர் ஒருவர் கூறினார்.
மற்றொரு இளைஞர் கூறும்போது, ‘‘விதிமீறல் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. ஆனால், போலீஸார் நடுரோட்டில் கூட்டமாக நின்றுகொண்டு, அனைத்து வாகனங்களையும் மடக்கி தீவிரவாதிகள்போல கையாள்கின்றனர்.
வீட்டின் அருகே உள்ள கடைக்கு மனைவியுடன் செல்கிறேன். நான் ஹெல்மெட் அணிந்துள்ளேன். பின்னால் இருக்கும் மனைவி ஏன் ஹெல்மெட் அணியவில்லை என கேட்கின்றனர்’’ என்றார்.
‘‘குடும்பத்தோடு ஓய்வாக சென்று வரலாம் என்ற எண்ணத்தில் வெளியே செல்பவர்களிடம் போலீஸார் இவ்வாறு அத்துமீறலில் ஈடுபடுவது மகிழ்ச்சியை குலைத்துவிடுகிறது. இதனால், ஒட்டுமொத்தமாக காவல் துறைக்கும், அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்துகிறது’’ என்று ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வழக்கு பதிவு செய்யும் தகுதி உள்ள ஒவ்வொரு காவல் அதிகாரியும் தினமும், பழைய வழக்குகள், அபராத நிலுவை வைத்துள்ள வாகனங்களை கைப்பற்றுமாறும், குறைந்தபட்சம் 80 ஹெல்மெட் வழக்கு, 3 டிடி (போதையில் வாகனம் ஓட்டுதல்) வழக்கு, சாலை விதிகளை மீறியதாக 30 வழக்கு உட்பட 150 வழக்குகள் பதிய வேண்டும்என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே இந்த கெடுபிடிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் 11 சாலை சந்திப்புகளில் 15 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, காவல் ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்துகண்காணிக்கப்பட்டு, தினமும் 3 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தை விரிவுபடுத்தாமல், வாகன ஓட்டிகளிடம் தேவையின்றி கெடுபிடி காட்டுவதை போக்குவரத்து போலீஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.