சிங்களர்களில் ஒரு பிரிவினரிடையே சோழர்கள் குறித்து இருக்கும் கசப்புணர்வைப் போக்க ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உதவும் என இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர் அய்யாதுரை சாந்தன் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற எழுத்தாளரான மறைந்த கல்கி எழுதிய புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி உள்ள நிலையில், இரண்டாம் பாகம் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளரான அய்யாதுரை சாந்தன், ‘சிங்களர்களில் ஒரு பிரிவினரிடையே சோழர்கள் குறித்து இருக்கும் கசப்புணர்வைப் போக்க பொன்னியின் செல்வன் திரைப்படம் உதவும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியர்களும் சிங்களர்களும் பாரம்பரிய ரீதியாக நெருங்கிய நட்பு கொண்டவர்கள் என குறிப்பிடும் அய்யாதுரை சாந்தன், பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இடையேயான போர்களின்போது பாண்டியர்கள் பக்கம் சிங்களர்கள் இருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, பாண்டியர்களுக்கான ஆதரவை சிங்களர்கள் விலக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ஒற்றை நோக்குடனே, இலங்கை மீது சோழர்கள் படையெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவு நாவல் மற்றும் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்தாலும், திரைப்படங்களில் இதற்கு முன் காட்சிப்படுத்தப்படவில்லை என்றும் அய்யாதுரை சாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் வல்லவராயனும், அருண்மொழியும், ஆழ்வார்க்கடியனும் இலங்கையில் பயணிக்கும்போது, சிங்கள நாட்டுப்புற பாடல் சேர்க்கப்பட்டிருந்தால், அது படத்திற்கு கூடுதல் அழகையும், கூடுதல் வரவேற்பையும் பெற்றுத் தந்திருக்கும் என்றும் அய்யாதுரை சாந்தன் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் பாகம் 2 அடுத்த ஆண்டுதான் வெளியாக இருக்கிறது என்பதால், குறைகளை சரிசெய்து கொள்ள நிறைய கால அவகாசம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவல் ஆசிரியரின் புகைப்படம், படத்தில் காட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு காட்டப்பட்டிருந்தால் அது இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ள சாந்தன் அய்யாதுரை, இதேபோல், 1950-களில் கல்கி இதழில் இந்த நாவல் தொடராக வந்தபோது நாவலோடு வெளியான ஓவியங்களை வரைந்த மணியம் குறித்தும் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் கலை இயக்குநருக்கு மணியத்தின் ஆராய்ச்சியும், ஓவியங்களும் பெருமளவில் உதவி இருந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் இரண்டாம் பாகத்திலாவது இவர்களுக்கு உரிய அஞ்சலியை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இருமொழி எழுத்தாளரான அய்யாதுரை சாந்தன், தெற்காசிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமியின் பிரேம்சந்த் ஃபெலோஷிப்பை கடந்த 2017ம் ஆண்டு பெற்றவர். இலங்கை அரசு மற்றும் அமைப்புகளின் விருதுகள் பலவற்றை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.