திண்டுக்கல்: சின்ன வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவதால், விரைவில் ஒரு கிலோ ரூ.100-ஐ தொடும் வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.
திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இதனால் திண்டுக்கல் நகரில் வெங்காயத்துக்கு தனியாக சந்தை உள்ளது. இந்த சந்தை திங்கள், புதன், வெள்ளி என வாரத்தில் 3 நாட்கள் கூடுகிறது. இங்கு மொத்தமாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். இதோடு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் திண்டுக்கல்லில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களான கரூர், திருப்பூர், தேனி மற்றும் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு, விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த வெங்காயத்தை கொண்டு வந்து மொத்தமாக விற்பனை செய்கின்றனர்.
பெரிய வெங்காயம் கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து லாரிகளில் மொத்தமாக திண்டுக்கல் சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஜூன் மாத தொடக்கத்தில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.50- ஐ கடந்து விற்பனையானது. அதன்பிறகு, படிப்படியாக விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ வெங்காயம் மொத்த மார்க்கெட்டில் ரூ.80-க்கு விற்றது.
வரத்து தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தேவை அதிகரிப்பால் விரைவில் கிலோ ரூ. 100 தொடும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வெங்காயம் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், கடந்த முறை வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் விலை கிடைக்காமல் இழப்பை சந்தித்ததால், இந்த முறை குறைந்த பரப்பிலேயே வெங்காயம் பயிரிட்டனர். இதன் விளைவாக தற்போது வரத்து குறைந்து விலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த நிலை, மேலும் ஒரு மாதம் நீடிக்க வாய்ப்புள்ளது. புதிதாக நடப்பட்ட வெங்காயம் அறுவடை செய்து சந்தைக்கு வரும் பட்சத்தில் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
சின்ன வெங்காய விலை சதமடிக்க காத்திருக்கும் நிலையில், பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விலை குறைந்து விற்பனையாவது குறிப் பிடத்தக்கது.