மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் காரைக்கால் மாவட்டம் திருமலைராயன்பட்டினம் பகுதியில் குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட போலகம் புதுக்காலனி, நைனிக்கட்டளை, காளியம்மன் கோயில் தெரு ஆகிய கிராமப் பகுதிகளில் நீண்ட காலமாக குடிநீர் வசதி இல்லாத நிலையில், பாதுகாக்கக்கப்பட்ட குடிநீர் வசதி கோரி இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருமலைராயன்பட்டினம் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் பழனிவேலு, மாவட்ட செயலாளர் எஸ்.எம்.தமீம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் நிலவழகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போலகம் ஆர்ச் பகுதியிலிருந்து காலிக் குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வந்து கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ஊர்வலம் புறப்பட்ட சிறிது தூரத்திலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அந்த இடத்திலேயே
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு வந்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் இளமுருகன் உள்ளிட்ட அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சு வார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் புதிதாக குழாய் அமைத்து குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதுவரை டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும் உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.