கல்லணை – பூம்புகார் சாலை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாகும். இச்சாலையில் வழியாக நவக்கிரஹ கோயில்கள், ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை முருகன் கோயில் இருப்பதால் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும், இச்சாலை வழியாக தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், விவசாய பொருட்களை எடுத்துச் சென்று வருகின்றனர். இச்சாலை கரிகாலன் சோழன் சென்று வந்த சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கல்லணை-பூம்புகார் சாலையை மறித்து, விக்கிரவாண்டி-தஞ்சாவூர் புறவழிச்சாலை அமைப்பதற்காக ரூ.3,517 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டது. அதன் பேரில், 2 முறை அந்த இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்து சென்றார். ஆனால், தற்போது தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உடனடியாக சுரங்கப்பாதை அமைத்துத் தர வலியுறுத்தி புளியஞ்சேரியில் சாலை மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.
இன்னம்பூர் எஸ்.சொக்கலிங்கம், கே.சுவாமிநாதன், எஸ்.ஆர்.வேல்முருகன் ஆகியோர் தலைமையில் கொட்டையூர், புளியஞ்சேரி, பாபுராஜபுரம்,இன்னம்பூர், சுவாமிமலை உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு, சுரங்கப்பாதை அமைத்துத் தரக்கோரிக் கண்டன முழக்கமிட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்த வட்டாட்சியர் பி.வெங்கடேஸ்வரன் மற்றும் சுவாமிமலை காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்,1 வாரக் காலத்திற்குள் இலகு ரக வாகனங்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைத்துத் தரப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் தேக்கமடைந்தன.
இது குறித்து கிராம மக்கள் கே.சுவாமிநாதன் கூறியது: “கல்லணை-பூம்புகார் சாலை கரிகாலன் சோழன் கல்லணையை கட்டி விட்டு, இச்சாலை வழியாகத் தான் பூம்புகார் சென்றார். இதே போல் கண்ணகியும் இச்சாலை வழியாகத்தான் மதுரைக்கு சென்றார் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இச்சாலை மறித்து புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இது குறித்து நாங்கள், பழமையான இச்சாலையை மறிக்கக்கூடாது, 1 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்வதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்ததின் பேரில், அவரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர். ஆனால் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். அரசு அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தபடி 1 வார காலத்திற்குள் அமைத்து தராவிட்டால், தொடர் போராட்டம் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.