இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில்,  இந்திய அணி, 2 வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை தோல்வியின் விளிம்பில் போராடி வருகிறது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 78 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 432 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் அந்த அணி 354 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மாவும் கே.எல்.ராகுலும் நிதானமாக ஆடினர். பொறுமையாக ஆடிய கே.எல்.ராகுல் 8 ரன் எடுத்தபோது ஓவர்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து புஜாரா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். ரோகித் அரைசதம் கடந்த நிலையில், ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 156 பந்துகளை சந்தித்து 59 ரன்கள் எடுத்தார். பின்னர் புஜாராவுடன் கேப்டன் விராத் கோலி இணைந்தார்.

இருவரும் சிறப்பாக ஆடினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. புஜாரா 91 ரன்களுடனும் கேப்டன் கோலி 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே,  புஜாரா ஆட்டமிழந்தார். ராபின்சன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் ஆனார். அவர் 189 பந்துகளை சந்தித்து 91 ரன்கள் எடுத்தார்.

இதையத்து விராத் கோலியுடன் ரஹானே இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், ராபின்சன் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து விராத் கோலி ஆட்டமிழந்தார். அவர் தன் பங்குக்கு 55 ரன்கள் எடுத்தார். பின்னர் ரஹானேவுடன் ரிஷப் பன்ட் இணைந்தார். ரஹானே (10) விக்கெட்டை ஆண்டர்சன் தூக்க, ராபின்சன், ரிஷப் பன்டை ஆட்டமிழக்க செய்தார். 94 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பில், 254 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தோல்வியின் விளிம் பில் இந்திய அணி தடுமாறி வருகிறது.