ரஹ்மானுக்கு 54 வயதாகிவிட்டது. இருந்தும், இன்றைய கால ரசனைக்கு ஏற்ற பாடலை, இன்றைய நவீன தலைமுறையினரின் எதிர்பார்ப்பை மிஞ்சிய பாடலை அவரால் தொடர்ந்து வழங்க முடிவது பெரும் ஆச்சரியமே. தான் அறிமுகமான ‘ரோஜா’ திரைப்படத்திலிருந்து இன்றுவரை ஏ.ஆர். ரஹ்மான் நம்மை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குவதை நிறுத்திக் கொள்ளவில்லை. அவருடைய சமீபத்திய ஆச்சரியம் ‘பரம சுந்தரி’ பாடல்.

கடந்த ஆண்டில் ‘99 ஸாங்ஸ்’ திரைப்படத்தின் மென்மையான பாடல்களின் மூலம் நம்மை மெய்சிலிர்க்க வைத்த அவர், இன்று ‘மிமி’ திரைப்படத்தின் ‘பரம சுந்தரி’ பாடல் மூலம் இன்றைய இளைஞர்களை மெய்மறந்து ஆட வைக்கிறார். இன்றைய இளைஞர் உலகின் பேசுபொருளாக இருக்கும் அந்தப் பாடல் கடந்த மாதத்தின் இறுதியில் வெளியானது. வெளியான சில நிமிடங்களில் காட்டுத் தீயைப் போன்று சமூக ஊடகங்களில் அதிவேகத்தில் பரவத் தொடங்கிய அந்தப் பாடல் இன்று 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது.

இந்தப் பாடலை வேறு யார் உருவாக்கி இருந்தாலும், அது ஒரு சாதாரண பார்ட்டி பாடலாக மட்டுமே வெளிப்பட்டு இருக்கும். ரஹ்மானின் அபரிமித இசைத் திறனால் இந்த எளிய மெட்டு அடைந்திருக்கும் இசை வடிவம், இன்றைய இளம் இசையமைப்பாளர்களுக்கான இசைப் பாடம். அமிதாப் பட்டாச்சார்யா எழுதிய குறும்பு கொப்பளிக்கும் வரிகளையும், ஸ்ரேயா கோஷலின் தெய்வீகக் குரலையும் தன்னுடைய உன்னத இசையால் இணைத்து, அதற்கு ரஹ்மான் உயிர்கொடுக்கும் அலாதியான விதம், அவருக்கு மட்டுமே உரித்தானது. அது அவருடைய தனித்திறனும்கூட.

பொதுவாகப் பல முறை கேட்ட பின்னரே ரஹ்மானின் பாடல்களை நம்முடைய மனம் ஏற்கத் தொடங்கும். அவருடைய பாடல்களில் மறைந்திருக்கும் இசைப் படிமங்கள் அவ்வளவு நுணுக்கமானவை; ஆழமானவை. அவை நமக்குப் புரிபடுவதற்கு ஒருமுறை கேட்பது கண்டிப்பாகப் போதாது. ‘பரம சுந்தரி’ பாடல் இதற்கு விதிவிலக்கு. இந்தப் பாடலின் எளிமையான மெட்டு, அதை நாம் கேட்கத் தொடங்கிய சில நொடிகளில் நம்முடைய மனத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துவிடுகிறது. அந்தப் பாடலில் வெளிப்படும் ரஹ்மானின் நவீனத்துவ இசை நம்மை மெய்சிலிர்த்து ஆடவைக்கிறது.

1992இல் வெளியான ரோஜா படத்தின் பாடல்கள் காலத்தை வென்று இன்றும் நிலைத்து ஒலிக்கின்றன. அந்தப் பாடல்களின் நேர்த்தியான இசையும் புதுவித ஒலியும் இசைக் கோப்பின் தரமும் அன்றைய தலைமுறையினரைப் பிரமிக்க வைத்தது. இன்று அதே பிரமிப்பை இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தன்னுடைய ‘பரம சுந்தரி’ மூலம் ரஹ்மான் ஏற்படுத்தியுள்ளார்.

காலத்தை வென்ற, தலைமுறையை வென்ற பாடல்களை உருவாக்கும் திறனால் சிலர் மட்டுமே ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சிலரில் ரஹ்மான் முக்கியமானவர். ‘பரம சுந்தரி’யைக் கேட்டுப் பாருங்கள். ரஹ்மானின் மேன்மையை, அவர் இசையின் உன்னதத்தை அது உங்களுக்கு உணர்த்தும்.