சென்னையில் மழைக்காலம் துவங்கியிருப்பதால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, வாட்ஸ் அப் ஆடியோ பதிவு வாயிலாக அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்த ஆடியோ பதிவில், “சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால், பலனை தந்து வருகிறது. அதேநேரம், தவறை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பாக உள்ளது. எனவே, அனைத்து வடிகால்களிலும், நீர் சீராக செல்கிறதா, ஏதேனும் பிரச்சினை இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் இருந்தாலும், பிரதான கால்வாய், கிளை கால்வாய்களில் நீர் உள்வாங்காமல் தடைப்படக்கூடிய 112 இடங்களில் முன்னெச்சரிக்கையாக தலைமை அலுவலகங்களில் மோட்டார் பம்புகளை எடுத்துச் சென்று தயார் நிலையில் அமைக்க வேண்டும்.
பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ள மழைநீர் வடிகால்களில், முழுமையாக பணியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு பணிகள் நடைபெறும்போது, இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்புகள் கட்டாயம் அமைக்க வேண்டும். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில், மணல் கொட்டி, பின் ஜல்லி கற்களை போட்டு, அவற்றை திடப்படுத்தி, அதன்பின், கான்கிரீட் அமைக்க வேண்டும். மழை மற்றும் புயலால் மரங்கள் வேரோடு சாய்வதை தடுக்கும் வகையில், அதுபோன்ற மரங்களை கண்டறிந்து மரக்கிளைகளை அகற்ற வேண்டும்” என்று அந்த ஆடியோவில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேசியுள்ளார்.