காத்து வாக்கில் வந்த இரண்டு காதல்கள் வந்த வேகத்தில் கலைந்ததா அல்லது தேங்கியதா என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

விஜய் சேதுபதி குடும்பத்தல் இருப்பவர்களை திருமணம் செய்தால் இறந்துவிடுவார்கள் என்ற தோஷத்தால், அவர் வீட்டில் இருப்பவர்கள் சிங்கிளாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்த தோஷத்தை மீறி திருமணம் செய்யும் விஜய் சேதுபதியின் தந்தை இறந்துவிட, ஊர் முழுவதும் விஜய் சேதுபதியை ராசியில்லாதவன் என ஒதுக்குகிறது. அதிர்ஷ்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் நுழையும் இரண்டு பெண்கள், அவரை எப்படி அதிர்ஷ்டசாலியாக மாற்றுகிறார்கள் என்பது தான் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் கதை.

‘ராம்போ’வாக விஜய் சேதுபதி. நயன்தாராவிடம் நல்ல பெயர் எடுப்பதும், சமந்தாவை ஓரக்கண்ணில் சைட் அடிப்பதும், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டுவதும், அப்பாவியாக மாட்டிக்கொண்டு முழிப்பதும் என படம் முழுக்க அசத்துகிறார். மிகவும் இயல்பான, எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நயன்தாரா, சமந்தாவை பார்த்துப் பேசும் காட்சியிலும், சிங்கள் ஷாட் காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார் விஜய்சேதுபதி. ‘கண்மணி’யாக நயன்தாரா. படத்துக்கு படம் வயதைக் குறைத்துக்கொண்டேயிருக்கும் மேஜிக்கை நிகழ்த்துகிறார். பொறுப்பான அக்காவாகவும், சமந்தாவுடன் சண்டையிடும் காட்சிகளிலும், சீனியர் ஆர்டிஸ்ட்டுக்கே உண்டான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதீஜாவாக வரும் சமந்தாவின் சின்ன சின்ன க்யூட் ரியாக்‌ஷன்கள் ரசிக்க வைக்கின்றன. வெட்கப்படுவதும், கோவப்படுவதும், சென்டிமென்டாகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். நயன்தாராவுக்கும், சமந்தாவுக்கும் சரிநிகரான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, ரெட்டின் கிங்ஸ் லீ, லொள்ளு சபா மாறன் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காமெடி, காதல், சின்ன சின்ன ட்விஸ்ட்கள் என படத்தின் முதல் பாதியை எங்கேஜிங்காக கொண்டு சென்றிருக்கிறார் விக்னேஷ் சிவன். ‘மே பி, பேபி, மோபி’ ‘பெங்காலி, கங்குலி’ என ரைமிங் பெயர்களும், காதல் கலந்த காமெடிக் காட்சிகளும் படத்திற்கு ப்ளஸ். அதேபோல ரெட்டி கிங்ஸ் லீ, மாறன் காமெடிகள் நன்றாகவே கைகூடி வந்திருக்கின்றன. அவர்களுக்கான காட்சிகளை இன்னும் நீட்டித்திருக்கலாம் என தோன்றுகிறது. ‘காத்து மாதிரி வருகிற உறவு, காதல், பாசம் எல்லாத்தையும் வரும்போது ரசிக்கணும். பிடிச்சு வைக்கணும் நெனைக்கிற நிமிஷத்துலையே அது போயிடும்’ போன்ற வசனம் கவனம் பெற்றது.

இரண்டாம் பாதியில் தேவையற்ற, சுவாரஸ்யமில்லா காட்சிகள் திரைக்கதையின் வேகத்தை குறைக்கிறது. விஜய் சேதுபதி தாயின் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் கொடுக்கபடும் ஹைப், இரண்டாம் பாதியில் அவரை காமெடியாக்கி அதற்கான உணர்வை மழுங்கடிக்கச் செய்துவிடுகிறது. செல்வராகவன் படங்களைப்போலவே, இந்தப் படத்திலும் ஆண்களை திருத்தும் பொறுப்பை பெண்களே ஏற்றுக்கொள்கின்றனர். இதில் சின்ன திருத்தமாக இரண்டு பெண்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றனர்.

இரண்டு பெண் கதாபாத்திரங்களும் தங்களுக்குள் சண்டையிட்டு, தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். மாறாக நாயகன், ‘நீங்க தான் என்ன லவ் பண்ணீங்க, என்னால அத தடுக்க முடியல அவ்ளோதான்’ என தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளும் வகையிலான கண்ணோட்டத்தையும் பார்க்க முடிகிறது. படத்தின் கதையை ஆழமாக ஆராய்ந்தால் அதில் ஓர் ஆணாதிக்க நெடி இருப்பதை மறுக்க முடியாது.

அனிருத்துக்கு இது 25-வது படம். பின்னணி இசையில் பின்னியிருக்கிறார். அவரது இசை சில காட்சிகளின் தரத்தை உயர்த்துகிறது. காதல் சோகம் வழியும் காட்சிகளில் அவரது ‘வோகல்’ வாய்ஸ் அந்த உணர்வை அப்படியே கடத்த உதவியிருக்கிறது. எஸ்.ஆர்.கதிர், விஜய் கார்த்திக் கண்ணன் இருவரின் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது. குறிப்பாக, ‘நான் மழை’ பாடல் காட்சியில் ஒளிப்பதிவு இதமான காதல் உணர்வை அப்படியே ஊட்டுகிறது. சண்டை காட்சிகள், சில கேமரா ஆங்கிள்கள் ஈர்க்கும் வகையில் இருந்தன. சென்னைவாசிகளுக்கு பழக்கப்பட்ட பாண்டி பஜாரை ஏதோ வெளிநாட்டு சாலையைப்போல ரம்மியமாக காட்சிப்படுத்தியிருந்தனர். எடிட்டிங்கில் ஸ்ரீகர் பிரசாத் சற்று கத்தரியை நீட்டியிருக்கலாம்.

மொத்ததில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ காமெடி, காதல் என்டர்டெயின்ட்மென்ட்டை முழுமையாக உருவாக்கும் முயற்சியில் தடுமாற்றத்தைக் கண்டுள்ளது.