விலை உயர்வை கட்டுப்படுத்த பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளின் அடிப்படை இறக்குமதி வரியை 2.5%ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் சமையல் எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. மொத்த தேவையில் 3-ல்2 பங்கு இறக்குமதி செய்யப்படுகிறது. சமீப காலமாக உற்பத்திகுறைந்து தட்டுப்பாடு அதிகரித்ததால் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்நிலையில்,விலையைக் கட்டுப்படுத்துவதற்காக சமையல் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
இதன்படி, கச்சா பாமாயிலின் இறக்குமதி வரி 10-லிருந்து 2.5%ஆகவும், கச்சா சோயா மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி வரி 7.5-லிருந்து 2.5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி வரியை 37.5-லிருந்து 32.5% ஆகக் குறைத்துள்ளதாக மத்திய மறைமுக வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் தொடங்க உள்ள நிலையில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியைகுறைத்திருப்பது கணிசமாக விலையை குறைக்க உதவியாக இருக்கும் என ஜி.ஜி. படேல் அண்ட் நிகில் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்த்பாய் படேல் கூறியுள்ளார்.