சென்னை: சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளை ராணுவ உயர் அதிகாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் கண்டு ரசித்தனர். பரங்கிமலையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நாளை காலை பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று ராணுவத்தினரின் கண்கவர் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குதிரையில் அதிவேகத்தில் சென்று இலக்குகளை தாக்குவது, எதிரெதிரே குதிரையை ஓட்டிச் செல்லுதல், வளைவு நெளிவான பாதையில் குதிரைகளுடன் தடைகளை தாண்டுதல், நெருப்பு வளையத்தில் புகுந்து வெளியேறுதல் ஆகிய சாகசங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.
ராணுவ அதிகாரிகளின் ஜிம்னாஸ்டிக் பயிற்சி முறைகள் பார்வையாளர்களின் கரவொலியை பெற்றன. கேரளாவின் செண்டைமேள இசையுடன் களரி பயட்டு, சுருள்வாள் வீச்சு, கத்தி, ஈட்டிகளை கொண்டு அரங்கேற்றபட்ட போர்க்கலை பயிற்சிகளையும் அனைவரும் கண்டு ரசித்தனர். ராணுவ வாத்திய குழுவினரின் பாராவியாளர்களிடையே பெரும் வரவேற்பு காணப்பட்டது. சாகச நிகழ்ச்சிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களின் தலைவர்களுக்கும், நிக்லஸியின் முடிவில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நாளை நடைபெற உள்ள பயிற்சி நிறைவு விழாவில் மாலத்தீவின் ராணுவத் தலைமை தளபதி அப்துல் சமத் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.