பொருளாதார நெருக்கடி ஒருபுறம், அரசியல் நெருக்கடி மறுபுறம் என இலங்கை தேசம் ஊசலாடிக்கொண்டிருக்க அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவரது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் நடந்த சிறப்பு கேபினட் கூட்டத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றால் அதைச் செய்ய தான் தயாராக இருப்பதாக கூட்டத்தில் மகிந்த ராஜபக்சே உருக்கமாகப் பேசியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரதமரின் ராஜினாமா முடிவை அமைச்சரவை சகாக்களான பிரசன்ன ரனதுங்கா, நலக்கா கோடேவா, ரமேஹ் பதிரானா ஆகியோர் வரவேற்றதாகக் கூறப்படுகிறது. பிரதமர் ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தால், அமைச்சரவை தானே கலைந்துவிடும். இதனிடையே, அமைச்சர் விமலவீர திசநாயகே, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதால் இலங்கை நெருக்கடியில் எவ்வித மாற்றமும் வரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
மீண்டும் அவசரநிலை: முன்னதாக நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசர நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அவசர நிலை மூலம் போராட்டங்களை ஒடுக்க இலங்கை அதிபர் உத்தரவிட்டதோடு மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கூடுதல் பாதுகாப்புக்கும் அந்நாட்டு அதிபர் உத்தரவு பிறப்பித்தார்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. பல தசாப்தங்களுக்கு பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இது.
இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தன. மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஏப்ரல் 1ம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார்.
எனினும், ஐந்து நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் அவசரநிலை அமலுக்கு வந்தது.
இத்தகையச் சூழலில் பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.