சோனியாகாந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் அமலாக்கத் துறையை பாஜக அரசு பயன்படுத்தியதை வன்மையாகக் கண்டிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இயக்குனர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனம் மூலம், சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. அது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. சோனியா காந்தி தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த 2 தினங்களாக அமலாக்கத்துறை முன்பு விசாரனைக்கு ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.  முதல் நாளில் 9 மணி நேரத்துக்கு மேலாகவும் இரண்டாவது நாளில் சுமார் 10 மணி நேரமும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  இன்றும் 3வது நாளாக ஆஜராக ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சோனியா காந்தி,  ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சாதாரண மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்னைகளுக்கு பாஜக-விடம் பதில் எதுவும் இல்லாததால், பொதுமக்களை திசைதிருப்பும் வகையில் இந்த செயலில் பாஜக ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.