சட்டப்பேரவையில் நேற்று கேள்விநேரத்தின்போது கள்ளக்குறிச்சி தொகுதியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் ம.செந்தில்குமார் கோரிக்கை விடுத்தார்.அவிநாசி எம்எல்ஏவான முன்னாள்பேரவைத் தலைவர் பி.தனபால்,தனது தொகுதியில் பொறியியல்கல்லூரி தொடங்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
ஒரு பொறியியல் கல்லூரி தொடங்க கட்டிடம், ஆய்வகம், தேவையான பொருட்கள் வாங்க ரூ.96 கோடியும், சம்பளம் வழங்க ரூ.17.18 கோடியும் செலவாகும். தற்போது தமிழகத்தில் 10 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 3 உதவி பெறும் கல்லூரிகள், 554சுயநிதி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரிகளில் 1,380 இடங்கள் உள்ளன. இதில், 2020-21 கல்வியாண்டில் 918 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதேநேரம் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை அதிகரித்து வருகிறது. திருக்கோவிலூரில் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. எனவே, தற்போதைய நிதிச்சூழலில் கள்ளக்குறிச்சியில் புதிய கல்லூரிக்கு வாய்ப்பு இல்லை.
பொறியியல் முடித்த மாணவர்கள் தற்போது வேலை தேடி வருகின்றனர். அவர்களுக்கும் கலை,அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பாடத் திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.