தமிழகத்தில் கடந்த மாதம் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை நோட்டுகள் வழங்கப்படவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் படிக்கின்றனர். இதுவரை அரசின் விலையில்லா நோட்டுகள் வழங்கப்படாததால், மாணவர்கள் தொடர்ந்து படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேசமயம், அந்தந்த பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என தொடர்புடைய துறை அதிகாரிகள் சுற்றறிக்கைஅனுப்பியிருந்தனர். இதைத்தொடர்ந்து, விலையில்லா நோட்டுகளை வாங்க மாவட்டத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சென்றிருந்தனர்.
சராசரியாக ஒரு மாணவருக்கு 12 நோட்டுகள் தேவைப்படும் நிலையில், 4 நோட்டுகள் என்ற கணக்கின் அடிப்படையில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் குறைந்தஅளவிலான நோட்டுகளே வழங்கப்பட்டன. மேலும் பெரும்பாலானபள்ளிகளுக்கு நோட்டுகள் வரவில்லை எனவும் கூறப்படுகிறது. போதியஅளவு நோட்டுகள்வழங்கப்படாதது குறித்து அலுவலர்களிடம் ஆசிரியர்கள் விசாரித்தபோது, சென்னையிலிருந்து குறைந்தஅளவு நோட்டுகள் மட்டுமே வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, “அந்தந்த பள்ளிக்கூடங்களுக்கு விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் நேரில் சென்று வழங்க வேண்டும். மாணவர்களின் தேவைக்கேற்ப இதுவரை நோட்டுப் புத்தகங்கள் வரவில்லை.பள்ளியில் பாடம் கற்பிக்கப்படும் நிலையில், மாணவர்கள் வீட்டுக்கு சென்று வீட்டு பாடங்கள் எழுத முடிவதில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது” என்றனர்.