திண்டுக்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்தவதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று (ஜூலை 18) காலை 11.30 மணிக்கு வந்தார். கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் மணிமாறன் ஆகியோர் வரவேற்றனர்.
ரோப் கார் மூலம் மலைக் கோயிலுக்கு சென்ற அவர், ஆனந்த விநாயகரை தரிசித்து விட்டு, உச்சிகால பூஜையில் கலந்துகொண்டு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, போகர் சன்னதியில் வழிபட்டு, கோயில் வெளி பிரகாரத்தை சுற்றி வந்து வழிபாடு நடத்தினார். பின்னர் ரோப் கார் மூலம் அடிவாரத்துக்குச் சென்று காரில் புறப்பட்டு சென்றார். பழநி எம்எல்ஏ செந்தில்குமாரின் மனைவி மெர்சி உடனிருந்தார்.