நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான முதல் சுற்று போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணிக்காக விளையாடி வரும் இளம் சுழற்பந்து வீச்சாளரான கார்த்திக் மெய்யப்பன், ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். இது இந்த தொடரின் முதல் ஹாட்-ட்ரிக் ஆக அமைந்துள்ளது.
22 வயதான அவர் சென்னையில் பிறந்தவர். அவரது குடும்பம் துபாயில் குடியேறியது. மிக இளம் வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார் அவர். அண்டர் 19 அணியில் விளையாடி வந்த அவர் கடந்த 2019 வாக்கில் ஒருநாள் கிரிக்கெட்டிலும், கடந்த 2021 வாக்கில் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகம் ஆனார். வலது கை லெக்-ஸ்பின்னர். 8 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
தற்போது இலங்கை அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று போட்டியில் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். ஆட்டத்தின் 15-வது ஓவரில் பனுகா ராஜபக்சே, அசலாங்கா மற்றும் இலங்கை கேப்டன் ஷனகா விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீசிய 3 பந்துகளில் கைப்பற்றினார் அவர்.
இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். “பந்தை விக்கெட் டூ விக்கெட் வீச வேண்டும் என முடிவு செய்தேன். உலகக் கோப்பையில் ஹாட்-ட்ரிக் என்ற அந்த இனிய தருணத்தில் மூழ்கி உள்ளேன். அதுவும் ஷனகா விக்கெட் அற்புதமான ஒன்று” என கார்த்திக் சொல்லி இருந்தார்.