வங்கக் கடலில் இலங்கைப் படையினர் நிகழ்த்தும் அத்துமீறலுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை அவர்களின் இரு படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. இலங்கைப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
கடந்த 12 ஆம் தேதி தான் தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு படகுகளுடன் இலங்கைப் படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக அடுத்த அத்துமீறலை இலங்கை கடற்படையினர் நிகழ்த்தியிருப்பது சற்றும் மனித நேயமற்ற செயலாகும்.
வங்கக் கடலில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை கைது செய்வது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால் ஆகும். அதை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
வங்கக் கடலில் இலங்கைப் படையினர் நிகழ்த்தும் அத்துமீறலுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களை அவர்களின் படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.