மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் தமிழகம் பயனடைந்துள்ளது என்று, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், சேலத்தில் மக்கள் ஆசி யாத்திரையை மேற்கொண்டு, மக்களைச் சந்தித்தார். அவருக்குப் பொதுமக்களும், பாஜக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்த பிரதமர் மோடி, அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 12 பேர், மலைவாழ் மக்கள் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 43 பேரை மத்திய அமைச்சர்களாக்கினார். நாடாளுமன்ற உறுப்பினராகக் கூட நான் இருக்கவில்லை.
அமைச்சராக நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தேன். அரசியல் பின்புலம் ஏதுமில்லாத சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த 43 அமைச்சர்களையும், அறிமுகம் செய்து வைக்க, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி காத்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் சதி செய்து, கூச்சல் குழப்பம் ஏற்படுத்தி, அறிமுக நிகழ்ச்சியைத் தடுத்துவிட்டனர். இதனால், அறிமுக வாய்ப்பை நாங்கள் இழந்துவிட்டோம்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்குக் கூறி, அவர்களின் ஆசியைப் பெற நடத்தப்பட்ட மக்கள் ஆசி யாத்திரையில், 3 நாட்களில் 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் 169 இடங்களில் மக்களைச் சந்தித்தேன். மத்திய அரசின் திட்டங்களால் அதிகம் பயனடைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. இந்தியாவில் 54 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு அறிவித்த 2 ராணுவத் தளவாட உற்பத்தி தொழில் வழித்தடங்களில் ஒன்று உத்தரப் பிரதேசத்துக்கும் மற்றொன்று தமிழகத்துக்கும் ஒதுக்கப்பட்டது. மீன்வளத்துறை சார்பில் சென்னையில், சிறப்புப் பொருளாதார கடற்பாசி பூங்கா ரூ.3 லட்சம் கோடி மதிப்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கவும், நாடு முழுவதும் கால்நடைத்துறை மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை மேம்படுத்தவும் ரூ.54 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மேம்பாட்டுக்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் ரூ.7 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் தமிழகம் பயனடைந்துள்ளது.
2014-க்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் கூட தாக்கப்படவில்லை. மீனவர் பிரச்சினை வரும் போது இலங்கை அரசுடன் பேசி தீர்வு காணப்பட்டு வருகிறது. மீனவர் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து செயல்படும். கடந்த காலத்தில் இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேர், அதில் இருந்து மீட்கப்பட்டனர்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவர பெரும்பாலான மாநிலங்கள் தயாராகவில்லை. தமிழகத்தில் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, திமுக நடந்து கொள்ளவில்லை. பெட்ரோலுக்கு ரூ.5 குறைப்போம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு ரூ.3 மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை குறைக்கப்பட வில்லை. மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை, பயிர்க் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட வாக்குறுதிகளைச் செயல்படுத்துவதற்கான விவரங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை. மொத்தத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திமுக உள்ளது”.
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.
பேட்டியின்போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கயிறு வாரிய முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.