அக்னி பாதை ஒரு முன்னோடி திட்டம்; தேவைப்பட்டால் அதில் மாற்றங்கள் பரிசீலிக்கப்படும் என்று ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜூ தெரிவித்துள்ளார்.

ராணுவம், கடற்படை, விமானப்படையில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணியாற்றும் ‘அக்னி பாதை’ திட்டம், கடந்த 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதிய திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அக்னி பாதை திட்டத்தில் வீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் புதிய திட்டம் குறித்து ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜூ, “அக்னி பாதை திட்டம் என்பது ஒரு முன்னோடி திட்டம். இது ராணுவ ஆள் சேர்ப்பு முறையில் அடிப்படை மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றத்தை அனைவரும் வரவேற்று ஏற்க வேண்டும். அக்னி பாதை திட்டத்தின் கீழ் ஆள் சேர்ப்பாக இருக்கட்டும். இத்திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதாக இருக்கட்டும் எதுவாக இருந்தால் 4 ஆண்டுகள் முடிந்த பின்னர் தேவைப்படும் மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும். இப்போதைக்கு நாம் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதே நமது நோக்கம். அரசாங்கமும் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அனுபவங்களின் அடிப்படையில் தானே தேவையான மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

பணப்பலன்கள் அதிகம்: ஒரு அக்னி வீரர் தன் பணிக்காலத்தில் ரூ.11.72 லட்ச ரூபாய் ஊதியமாகப் பெறுவர். பணி முடிந்தபின்னர் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் பெறுவார். இவற்றிற்கு வருமான வரி பிடித்தமும் இல்லை. மேலும், அவர் தனக்குக் கிடைக்கும் ரூ.24 லட்சத்தை கொலேட்டரலாகக் காட்டி அவர்கள் 18 லட்சம் கடனாகப் பெற இயலும்.
மேலும், 4 ஆண்டுகளுக்குப் பின்னர் அக்னி வீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளும் இருக்கும். அதனால் தான் ஓய்வூதியம் தரத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

ராணுவ சேவையில் திருப்பி இணைக்கப்படும் 25% வீரர்களும் அவர்களின் திறன் அடிப்படையில் சேர்க்கப்படுவர். அக்னி பாதை வீரர் ஒவ்வொருவரும் போர் வீரராகவும், சிக்னல் இன்ஜினியர், இஎம்இ என பல தொழில்நுட்பங்களிலும் தங்களின் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்.

பணியில் சேரும்போது 10 ஆம் வகுப்பு தேறியவருக்கு 4 ஆண்டுகளின் முடிவில் வீரர்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழும் கிடைக்கும். தேசிய திறன் தகுதி சான்றிதழ் கிடைக்கும். இந்தச் சான்றிதழ்கள் அவரை அடுத்தநிலையில் நிறுத்தும். அவர் மேற்கொண்டு படிக்க விரும்பினாலும் படிக்கலாம். அவர் எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையிலேயே பயிற்சியளிக்கப்படுகிறார். அவர் தொழில் முனைவராகலாம். வேறு எங்கும் வேலையில் சேரலாம். ஆனால், 21 வயதுக்குப் பின்னர் அரசுப் பணி என்ற ஒன்றை மட்டும் முன்வைத்துப் போராடுகின்றனர். 21 வயதிலும் பல்வேறு கல்வி கற்கலாம்.

படிப்படியாக இணையும் வீரர்கள்: இந்த ஆண்டு இத்திட்டத்தின் கீழ் 40,000 வீரர்கள் சேர்க்கப்படுவர். 2023ல் 40,000 பேர் சேர்க்கப்படுவார்கள். 2024ல் 45,000 பேரும், 2025ல் 50,000 பேரும் சேர்க்கப்படுவார்கள். அதனால் அக்னி வீரர்களாக வெளியே வருவோரின் எண்ணிக்கை படிப்படியாகவே உயரும். ஆரம்பத்தில் வெளியேறும் அக்னி வீரர்களின் எண்ணிக்கை 40,000 என்றளவில்தான் இருக்கப்போகிறது. எனவே, தேவையான மாற்றங்களை செய்வதும் எளிது.

அக்னி வீரர்களுக்கு மத்திய ரிசர்வ் படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு. எல்லை பாதுகாப்புப் படை, பாதுகாப்பு பொதுத்துறை ஆகியனவற்றில் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் எல்லாம் இளைஞர்களை சமாதானப்படுத்த அறிவிக்கப்படவில்லை. இவை எல்லாம் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் அக்னி பாதை திட்டத்தை ஊக்குவிக்க அறிவிக்கப்பட்டதாகும்.

அக்னி பாதை திட்டத்தின் கீழ் சரியான பயிற்சிகள் வழங்கப்படும். ஒரு நபர் வாகனப் பராமரிப்புப் பிரிவில் பயிற்றுவிக்கப்பட்டார் என்றால் அவர் அந்த நான்கு ஆண்டுகள் பணி முடித்துவரும்போது அவர் தனியாக ஒரு ஒர்க்‌ஷாப் தொடங்கும் அளவிற்கு நுட்பமான பயிற்சிகளையும் பெற்றவராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.