வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு ஓராண்டாக காட்சி பொருளாக நிற்கிறது. விபத்து அதிகம் நடக்கும் பகுதியில் இந்த உயர் கோபுர மின்விளக்கு பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது அப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில், சென்டர் மீடியனில் மின்விளக்குகள் ௭துவும் அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிகம் நடந்தது.
இதனை கருத்தில் கொண்டு அதிக விபத்துக்கள் நடைபெறும் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், கடந்த ஓராண்டுக்கு முன்பு உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. குறிப்பாக கொளப்பாக்கம், வெங்கம்பாக்கம், கண்டிகை, மாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இந்த விளக்குகள் அமைக்கப்பட்டன.
அகரம் தென் ஊராட்சி – வெங்கம்பாக்கம் சந்திப்பு பகுதியில், 2 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன. மற்ற இடங்களில் அமைக்கப்பட்ட அனைத்து மின் விளக்குகளும் மின் இணைப்பு வழங்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால், வெங்கம்பாக்கம் பகுதியில் மட்டும் உயர்கோபுர மின்விளக்கு ஓராண்டாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்தப் பகுதியில் கல் அரைக்கும் கிரஷர்கள் இருப்பதால், ஏராளமான லாரிகள் இந்த சாலையில் தினசரி இரவு, பகல் நேரங்களில் சென்று வருகின்றன. இதனால் இப்பகுதி சாலைகளில் எப்போதும் தூசி மண்டலமாக காணப்படும்.
இதன் காரணமாக விபத்து அதிகம் நடக்கும் என்பதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றாக உயர்கோபுர மின் விளக்கும் அமைக்கப்பட்டது. மின் இணைப்பு கொடுக்காததால் கடந்த ஓராண்டாக இந்த உயர்கோபுர மின்விளக்கு காட்சி பொருளாகவே இருந்து வருகிறது. மின் உதிரிபாகம் இல்லாததால் இணைப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அகரம்தென் ஊராட்சி மன்ற தலைவர் சி.கே.ஜெகதீஸ்வரன் கூறியது: அதிக விபத்து கொண்ட பகுதி என்பதால், அப்பகுதியில் விளக்கு அமைக்க வேண்டும் என, அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு முன்பு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் ஊராட்சியிடம் அனுமதி கேட்டனர். நாங்களும் அனுமதி கடிதம் கொடுத்தோம்.
ஆனால், இன்று வரை அந்த புதிய விளக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பலமுறை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் மெத்தனமாக உள்ளனர். கேட்டால் அரசிடம் போய் சொல்லுமாறு அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இவ்வாறு கூறினார்.
செங்கை நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, வெங்கம்பாக்கத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. மின் இணைப்பு வேண்டி கடந்த 21.12.2022 ஆண்டு ரூ. 1 லட்சத்து 7,040 கட்டணம் செலுத்தப்பட்டது. ஆனால் இணைப்பு கொடுப்பதில் மின்வாரியம்தான் தாமதம் செய்கிறது என்றார். இதுபற்ரி கண்டிகை உதவி மின் பொறியாளர் ரஞ்சிதம் கூறியதாவது: உயர் கோபுரம் மின்விளக்கு இணைப்பு கொடுக்க நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டணம் செலுத்தப்பட்டது உண்மைதான்.
என்னென்ன உதிரி பாகங்கள் தேவை என்பதை எங்கள் உயரதிகாரிகளுக்கு அறிக்கையாக கொடுத்திருக்கிறோம். ஆனால், இன்னும் அதற்கான அந்த உதிரிபாகங்கள் எங்களுக்கு வரவில்லை. உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாகவே இணைப்பு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு வாரங்களில் இணைப்பு கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.