வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “வறுமை காரணமாக கேரளத்திற்கு சென்று பரிசுச்சீட்டு விற்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எழுத்தறிவு அதிகம் பெற்ற கேரளத்தில்தான் நரபலி போன்ற மூடநம்பிக்கைகளும், கொடூரங்களும் அதிகமாக நிலவுகின்றன. எந்த பின்புலமும் இல்லாமல் கேரளத்திற்கு வாழ்வாதாரம் தேடிச் செல்லும் தமிழர்களின் பாதுகாப்பை கேரள அரசு உறுதி செய்ய வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாததுதான் மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முதன்மை காரணம். தருமபுரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். கொல்லப்பட்ட பத்மாவின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.