கீழடியில் நடைபெற்று வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கை:
“மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இதுவரை நடத்தப்பட்ட 6 அகழாய்வுகளில் 5 ஆய்வுகளின் அறிக்கை வெளியாகாதது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்குப் பிறகு மிகப்பெரிய அளவிலான அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அகழாய்வுகளின் ஏழாம் கட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. கரோனா இரண்டாவது அலை காரணமாக அகழாய்வுப் பணிகள் சற்று பாதிக்கப்பட்டாலும், தமிழர் நாகரிகம் மிகவும் தொன்மையானது என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமான பொருட்கள் அங்கு கிடைத்து வருகின்றன.
கீழடி அகழாய்வில் ஆதன், உதிரன் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஓடுகள் ஏற்கெனவே கிடைத்திருந்த நிலையில், 13 எழுத்துகள் கொண்ட பானை ஓடுகள் இப்போது கிடைத்திருக்கின்றன. இந்த ஓடுகள் 2600 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பே புதைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதால், தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வி அறிவு பெற்றிருக்கலாம் என்ற நம்பிக்கை எழுந்திருக்கிறது. இது விரைவில் நிரூபிக்கப்படக் கூடும்.
தங்கக் காதணிகள், கல் உழவு கருவி, இரும்பு ஆயுதம், உறைகிணறு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை நடத்தப்பட்ட 6 கட்ட அகழாய்வுகளில் கிடைத்த பொருட்களை விட இவை பழமையானவை என்பது ஒருபுறமிருக்க, இவை நவீன பயன்பாடு கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன் 60 செ.மீ உயரம், 34 செ.மீ விட்டம், 24. செ.மீ. விட்டமுள்ள வாய்ப்பகுதி கொண்ட சிவப்பு வண்ணப் பானை கிடைத்திருக்கிறது.
இது தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்திருக்கிறது. இந்தப் பானை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மேலும் 5 பானைகள் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் இன்னும் கூடுதலாக அகழாய்வு நடத்தினால் இன்னும் பல வியப்புகள் வெளிப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், செப்டம்பர் மாதத்தின் முற்பகுதியில் ஆய்வுகளை முடிக்க அதிகாரிகள் தீர்மானித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழர் நாகரிகத்தின் தொன்மைக்குக் கட்டியங்கூறும் ஏராளமான பொருட்கள் இந்த அகழாய்வில் கிடைக்கலாம் என்று கூறப்படும் நிலையில் ஏழாம் கட்ட ஆய்வை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடக் கூடாது. மாறாக, இன்னும் சில வாரங்களுக்கு ஏழாம் கட்ட அகழாய்வுகளை நீட்டித்து தொல்லியல் சிறப்புமிக்க பழங்காலப் பயன்பாட்டுப் பொருட்களைக் கண்டெடுக்க முயல வேண்டும். அதற்கு வசதியாக கீழடி ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகளை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
மற்றொரு புறம் கீழடியில் இதுவரை மொத்தம் 6 கட்ட அகழாய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒரே ஒரு அகழாய்வின் முடிவுகள் மட்டுமே வெளியாகியுள்ளன. இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட 6 ஆய்வுகளில் முதல் 3 ஆய்வுகளை மத்திய தொல்லியல் துறையும், அடுத்த 3 ஆய்வுகளை மாநில தொல்லியல் துறையும் நிகழ்த்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நான்காம் கட்ட அகழாய்வு முடிவுகள் 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.
தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நிரூபிக்க அந்த அகழாய்வு முடிவுகள்தான் அடிப்படையாக அமைந்தன. ஆனால், அதன்பின் நடத்தப்பட 5 மற்றும் 6ஆம் கட்ட அகழாய்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதைவிடக் கொடுமை 2015 முதல் 2017 வரை மத்திய தொல்லியல் துறை நடத்திய முதல் 3 கட்ட அகழாய்வுகள் குறித்த அறிக்கைகள் 6 ஆண்டுகளாகியும் வெளியிடப்படாததுதான்.
கீழடி அகழாய்வு வழக்கமான தொல்லியல் ஆய்வு அல்ல. அது தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பறைசாற்றுவதற்கான வேள்வி ஆகும். தமிழர் நாகரிகம் தொன்மையானது என்று மெய்ப்பிக்கப்படுவதை சில சக்திகள் விரும்பவில்லை. அதனால்தான் கீழடி அகழாய்வுக்கு தொடக்கம் முதலே முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வந்தன. தமிழக அரசு நடத்திய அகழாய்வின் முடிவுகள் ஓராண்டில் வெளியான நிலையில், மத்திய அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் ஆறு ஆண்டுகளாகியும் வெளிவராதது இயல்பான ஒன்றல்ல. மதுரை உயர் நீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பிறகும் காலதாமதம் செய்யப்படுவதை அனுமதிக்கக் கூடாது.
கீழடி அகழாய்வின் முடிவுகளுக்காகத் தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல. உலகம் முழுவதும் வாழும் பத்துக் கோடிக்கும் கூடுதலான தமிழர்கள் காத்துக் கிடக்கின்றனர். எனவே, முதல் 3 கட்ட அகழாய்வு அறிக்கைகளை உடனடியாக வெளியிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். 5 மற்றும் 6-ஆம் கட்ட அகழாய்வு அறிக்கைகளை தமிழக அரசு விரைவாக வெளியிட வேண்டும்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.