“2014 வரை ஊழல், குடும்ப ஆட்சியில் சிக்கியிருந்த இந்தியா இப்போது புதிய உயரங்களை எட்டி வருகிறது” எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

கரோனாவால் பெற்றோர், பாதுகாவலர், தத்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத் திட்டம் கடந்தாண்டு மே-29ம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் கடந்த 2020 மார்ச் 11-ம் தேதி முதல் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கரோனா பாதிப்பால் பெற்றோர், பாதுகாவலர், தத்து பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பி.எம்.கேர்ஸ் பாஸ்புக், ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழான சுகாதார அட்டை ஆகியவை வழங்கு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

கரோனாவால், பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்ட பலன்களை பிரதமர் மோடி காணொலி மூலம் அவர் வழங்கினார்.

 

 

 

பின்னர் அவர் பேசுகையில், “மத்தியில் பாஜக எட்டு ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இதனை ஒட்டி பிரதமர் மோடி பேசுகையில், “இன்றுடன் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. தேசமக்களின் நம்பிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துளது. 2014க்கு முன்னர் ஊழல், பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள், குடும்ப ஆட்சி, தீவிரவாத அமைப்புகள் ஆகியன நாடு முழுவதும் பரவிக் கிடந்தன. நாட்டில் பிராந்திய ரீதியான பாகுபாடுகளும் அதிகமாக இருந்தன.

ஆனால், தேசம் அந்த மோசமான சூழலிருந்து வெளியேறிவிட்டது. பாஜக ஆட்சி அமைந்த இந்த 8 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள உயரம் யோசனைகளை விஞ்சியது. இந்தியாவின் பெருமை உலக அரங்கில் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் சக்தியும் ஓங்கியுள்ளது. இந்திய தேசத்தை இளம் சக்திகள் வழிநடத்துவதில் எனக்கு மகிழ்ச்சி.

கரோனா பெருந்தொற்று காலத்தில், இந்தியா தனது ஆற்றலை வெளிப்படுத்தியது. நாட்டின் விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், இளைஞர்களும் கரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டனர்.

இந்தியா கரோனா தடுப்பில் உலகளவில் நம்பிக்கையை விதைத்தது. எல்லா எதிர்மறை விமர்சனங்களுக்கும் மத்தியில் இந்தியா அதன் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், இளைஞர்களை நம்பியது. அதனால்தான் நாம் இன்று உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறோம். கரோனா நெருக்கடிக்கு இடையில் சுமையாக இல்லாமல் நாம் தீர்வு வழங்கும் தேசமாக உயர்ந்தோம்” என்றார்.