டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க். இந்த மகுடத்தில் இணையப் பறவை ட்விட்டரை சூட்டிக் கொண்ட மஸ்க், அதன்பின்னர் எடுத்துவரும் ஒவ்வொரு நடவடிக்கையும் அதிரவைப்பவையாகவே உள்ளன.

அந்த வகையில் அவருடைய கடைசி அறிவிப்பும் அதிர்ச்சி ரகமாகவே அமைந்துள்ளது. ஆம், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், இனி ட்விட்டர் ஊழியர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது. பெருந்தொற்று காலமெல்லாம் முடிந்துவிட்டது. அதனால், இனி எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியும் சலுகை இல்லவே இல்லை. இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் வேலைக்கு வரலாம். இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்கலாம். ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு எலான் மஸ்குக்கு நீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் முந்தைய நாள் ட்விட்டர் அலுவலகத்திற்கு வந்த எலான் மஸ்க் கையில் ஒரு கை கழுவும் தொட்டியுடன் வந்திருந்தார். அதனைப் பற்றி அவர் பகிர்ந்த ட்வீட் ஒன்றில் ‘நான் ட்விட்டர் தலைமையகத்திற்குள் நுழைகிறேன்.’ (Entering Twitter HQ – let that sink in!) என்று தலைப்பிட்டிருந்தார். அதன் பின்னர் ட்விட்டரில் நடக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் அவர் கூறியது வெறும் வார்த்தையா? அல்லது ட்விட்டரில் அவர் வருகைக்குப் பின்னர் வரவிருந்த விளைவுகள் குறித்த எச்சரிக்கையா என்ற ஐயங்களை ஏற்படுத்துவதாக கருத்துகள் உலா வருகின்றன.

எலான் மஸ்க் கைகளுக்கு ட்விட்டர் வந்தபின்னர் முதல் நடவடிக்கையாக ட்விட்டரின் சிஇஓ-வாக பொறுப்பு வகித்து வந்த பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார். மேலும், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்டத்துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் ஆகியோரையும் பணி நீக்கம் செய்தார். மேலும், ட்விட்டரில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதி பேர் (50%) வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
ட்விட்டரில் ப்ளூ டிக் பெறுவதற்கு மாதாந்திர கட்டணமாக 8 டாலர் வழங்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக எலான் மஸ்க் அறிவித்தார்.

பின்னர் கடந்த வாரம் “நீங்கள் அலுவலகத்துக்கு வந்து கொண்டிருந்தாலோ அல்லது அலுவலகத்திற்கு ஏற்கெனவே வந்துவிட்டாலோ வீட்டுக்குத் திரும்பலாம். வெள்ளிக்கிழமை மாலைக்குள் நீங்கள் வேலையில் இருக்கிறீர்களா இல்லையா என்பது பற்றி உங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்” என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பணியாளர்கள் நீக்கப்பட்டனர்.

சர்வதேச அளவில் அந்நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.

இதன் நீட்சியாக எஞ்சியிருக்கும் ஊழியர்களை நேரில் சந்தித்த மஸ்க், முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து வெளியேறிவரும் சூழலில் விரைவில் ட்விட்டர் திவாலாகும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.