விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 24-ம் தேதி சென்னையில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தப் படத்தின் ட்ரெய்லர் புத்தாண்டு அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, ‘வாரிசு’ படத்தின் அம்மா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.