தமிழகம் முழுவதும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற்று வந்த மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் இனி நடைபெறாது என்றும், தேவைக்கேற்ப முகாம்கள் நடத்துவதை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது. இரண்டு தவணை தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டங்கள் நடத்தப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. அரசு மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக நோய்த் தொற்று தாக்கம் குறைந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
இனி மெகா தடுப்பூசி முகாம் இல்லை: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வந்தது. இதுவரை நடந்த மெகா தடுப்பூசி முகாம்களின் மூலம் இதுவரை 4 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில், ஒரே நாளில் இந்த மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தாமல், தேவையைப் பொருத்து மாவட்ட நிர்வாகங்கள் இனி தடுப்பூசி முகாம்கள் நடத்துவதை முடிவு செய்வார்கள் என்று தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதேநேரம் அரசு மருத்துவமனைகள், மருத்துக் கல்லூரி மருத்துவமனைகளில் எப்போதும் போல் கரோனா தடுப்பூசி தொடர்ந்து செலுத்தப்படும்.
தமிழகத்தைப் பொருத்தவவரை இதுவரை 27 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற முகாம்களின் மூலம், 92 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 73 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இன்னும் 49 லட்சம் பேர் மட்டுமே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 1 கோடியே 37 லட்சம் பேர் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.