நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு வெப்ப அலையின் பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் வெப்ப அலை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பத்தின் அளவு புதிய உச்சத்தை அடைந்தது. மார்ச் மாதம் 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் பதிவானது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதங்களில் அக்னி வெயில் காலத்தின்போது அதிக அளவு வெப்ப நிலை பதிவாகும். ஆனால், இந்த ஆண்டு மழை காரணமாக பல இடங்களில் குறைவான வெப்ப நிலை மட்டுமே பதிவாகி வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வெப்ப நிலை மற்றும் அதன் தாக்கும் குறித்து ’இந்து தமிழ் திசை’ செய்தித் தளத்துக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார், தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலசந்திரன்.
வெப்ப அலை என்றால் என்ன?
“ஒவ்வோர் இடத்திற்கும் ஓர் இயல்பு வெப்ப நிலை உள்ளது. ஒரு பகுதியில் 30 ஆண்டுகள் பதிவான வெப்ப நிலையில் கொண்டு இயல்பு வெப்ப நிலை கணக்கீடு செய்யப்படும். இந்த இயல்பு வெப்பநிலையை விட எவ்வளவு அதிகம் பதிவாகிறது என்பது கொண்டுதான் வெப்ப அலை கணக்கீடு செய்யப்படுகிறது. இயல்பில் இருந்து எந்த அளவுக்கு உயர்ந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது கொண்டுதான் வெப்ப அலை தாக்கம் எந்த அளவு உள்ளது என்பது கணக்கீடு செய்யப்படுகிறது.”
எத்தனை டிகிரி வெப்பநிலை பதிவனால், அது வெப்ப அலை?
“தமிழகத்தில் மலைப் பிரதேசங்களுக்கு 35 டிகிரி செஸ்சியஸ், கடலோர மாவட்டங்களுக்கு 37 டிகிரி செல்சியஸ், உள் மாவட்டங்களுக்கு 40 டிகிரி செஸ்சிஸ் இயல்பு வெப்ப நிலை ஆகும். இதில் இருந்து 4 டிகிரி வெப்ப நிலை உயர்ந்தால் அது வெப்ப அலையாக கருதப்படும். 6 டிகிரி வரை வெப்ப நிலை உயர்ந்தால் அது தீவிர வெப்ப அலை என்று அழைக்கப்படும். இது இடத்திற்கு இடம் மாறும்.”
தமிழகத்தில் வெப்ப அலை பாதிப்பு உள்ளதா?
“பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில்தான் தற்போது வெப்ப அலை வீசி வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு வெப்ப அலை இல்லை. தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அசானி புயல் காரணமாக நல்ல மழை பெய்துள்ளது. எனவே, இந்த ஆண்டு தற்போது வரை தமிழகத்தில் வெப்ப அலை இல்லை.”
எந்த மாவட்டங்களில் வெப்ப அலையால் பாதிக்கப்படலாம்?
“திருவள்ளுர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்தான் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் பதிவாகும் வெப்ப அலை கீழே இறங்கினால் இந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும். இனி வரும் நாட்களில் காலநிலையைப் பொறுத்து தான் வெப்ப அலை இருக்குமா என்பதை கூற வேண்டும்.”
கடந்த ஆண்டுகளில் வெப்ப அலை வீசி உள்ளதா?
“தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் வெப்ப அலை பதிவாகவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்புதான் வெப்ப அலை பதிவாகியுள்ளது. ஆந்திராவை ஒட்டி உள்ள மாவட்டங்களில் தான் வெப்ப அலை கடந்த காலங்களில் பதிவாகி உள்ளது. இந்த ஆண்டு பல மாவட்டங்களில் இயல்பை விட குறைவான வெப்பம் பதிவாகி வருகிறது. திருத்தணியில் இயல்பை விட 10 டிகிரிக்கு குறைவாக வெப்பம் பதிவாகி உள்ளது.”
வெப்ப நிலை தொடர்பான தகவலை எப்படி தெரிந்துகொள்வது?
“தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தினசரி இந்த தகவல் வெளியிடப்படுகிறது. மையத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தினசரி மாலை 7 மணிக்கு மாவட்டம் வாரியாக பதிவான வெப்ப நிலை தொடர்பான தகவல் வெளியிடப்படுகிறது. இதில் பதிவான வெப்பநிலை, இயல்பு வெப்பநிலை, அதிகம் அல்லது குறைவு என்ற அனைத்து தகவலும் வெளியிடப்படும்.”
நாடு முழுவதும் தொடர்பான தகவலை எப்படி தெரிந்து கொள்வது?
“சென்னை வானிலை ஆய்வு மையத்தில் மையத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகம் மாநிலங்களின் தகவல்கள் கிடைக்கும். டெல்லி வானிலை மைய இணையத்தில் நாடு முழுவதுக்குமான தகவல்கள் கிடைக்கும். புனே இந்திய வானிலை ஆய்வு மையம் இணையதளத்திலும் இந்த தகவல் கிடைக்கும். இந்திய வானிலை துறை அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப எந்த அளவுக்கு இருக்கு என்பது முன் அறிவிப்பாக வெளியிடும்.”
நோய்கள் தொடர்பான முன்னறிவிப்பை வானிலை மையம் வெளியிடுகிறாதா?
“இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புனே இணையதளத்தில் நோய்கள் தொடர்பான வராந்திர முன்னறிவிப்பு வெளியிடப்படுகிறது. டெங்கு, மலேரியோ உள்ளிட்ட நோய்கள் எந்தப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக இந்த இணையதளத்தில் முன் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.”