சென்னை: மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இன்னும் ஓராண்டில் குறைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.
சென்னை டி.எல்.எப் போரூர் வளாகத்தில் ஒரு லட்சம் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அதிக அளவில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், போரூர், ராமாவரம், நந்தம்பாக்கம் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் நேரடியாக டிஎல்எப் ஐடி பூங்காவிற்கு வரும் வகையில் “மெட்ரோ கனெக்ட்” எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆலந்தூர் மெட்ரோ நிலையத்திலிருந்து போரூர் டி.எல்.எப் சைபர் சிட்டி வரை 4 குளிர்சாதன மின் டெம்போ வாகனம் இயக்கப்படுகிறது. இதறகு கட்டணமாக ரூ.40 வசூலிக்கப்பட உள்ளது. காலை ஆறு மணிக்கு தொடங்கும் “மெட்ரோ கனெக்ட்” சேவை இரவு 10 மணி வரை 15 நிமிட இடைவெளியில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக், இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி உள்ளிட்டோர் இந்த சேவையை இன்று (பிப்.6) தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயிர் நிர்வாக இயக்குனர் சித்திக், “ஒரே நேரத்தில் சுமார் 119 கிலோமீட்டர் தொலைவிற்கு, ரூ.63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. உலகத்தில் வேறு எங்கும் இப்படி ஒரு திட்டம் செயல்படுத்த வில்லை. மெட்ரோ பணிகளில் மாநில அரசு மிக உறுதியாக உள்ளது. பயணிகள் தங்கள் கடைசி கட்ட பயணம் வரை மெட்ரோ நிர்வாகம் பொறுப்பேற்கும் வகையிலான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் மெட்ரோ கனெக்ட்.
வருங்கால சேவைக்காக தற்போது போக்குவரத்து நெரிசலில் மக்கள் தவிக்கிறார்கள் என்பது தெரிகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை என்பது வருங்காலத்திற்கான திட்டம். 2026ல் சென்னை மெட்ரோ ரயில் 2வது கட்டம் நிறைவடைந்து நகரில் முக்கியப் பகுதிகள் இணைக்கப்பட உள்ளது. பயணிகளை மெட்ரோ நிலையங்களில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான பணியில் மினி வேன், சிற்றுந்து ஈடுபடும்.
மெட்ரோ கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வருத்தமாக இருந்தாலும், அவை தற்காலிகமானதுதான். மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் சவால் நிறைந்ததாகவே இருக்கும். இது புதிதல்ல. பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் தூண்கள் எழுப்பியதும் சாலைகளை விரிவு படுத்தி உள்ளோம். மெட்ரோ தூண்கள் எழுப்பியதும் சாலைகளில் உள்ள தடுப்புகளின் அளவு குறைக்கப்படும். அடுத்த ஓராண்டுக்குள் போக்குவரத்து நெரிசல் குறைக்க வழிவகை செய்யப்படும்.
லைட் மெட்ரோ திட்டங்கள் கும்டாவிடம் உள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை குறைக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுரங்கப் பணி நடைபெறும் இடங்களில் கட்டடம் பாதிக்கப்பட்டால், மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கட்டிக் கொடுக்கப்படும். விரிசல் ஏற்பட்டாலும் மெட்ரோ நிர்வாகம் சரி செய்து கொடுக்கும். சென்னை மெட்ரோ ரயில் செயலியில் அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ பயணச்சீட்டு வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.