சிம்புதேவன் இயக்கும் சரித்திர படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலுவின் இரட்டை வேடத்தில் வெளியானது ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ திரைப்படம். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வடிவேலுவுக்கு முக்கியமான படமாக இது அமைந்தது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்கியபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் நின்றுபோனது. இந்நிலையில், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தைப்போல நகைச்சுவை கதையம்சம் கொண்ட சரித்திர படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்க உள்ளதாகவும், அதில் யோகிபாபு நாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
யோகிபாபுவை பொறுத்தவரை அவர், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திலும், விஜய்யுடன் ‘வாரிசு’ படத்திலும் நடித்து வருகிறார். இயக்குநர் சிம்புதேவன் அண்மையில் ‘கசட தபற’, ‘விக்டிம்’ படங்களை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.