இந்தியை கற்றுக் கொள்ளாதே என்ற உங்களது திராவிட கொள்கையால் எனது தனிமனித அதிகாரத்தை குறைத்தீர்கள்’ என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
துக்ளக் இதழின் 52-வது ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார்.
அதில் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜக என்பது இப்படியான கட்சி என்று முன் தீர்மானம் பல வருடங்களாக நிலவுகிறது. உயர்ந்த குலத்தில் பிறந்தவர்களுக்கான கட்சி. பணக்காரர்களுக்கு வேலை செய்யக் கூடிய கட்சி. ஏழைகளுக்கு இக்கட்சியில் இடமில்லை. இந்திக்கார கட்சி, வட இந்தியர்களுக்கான கட்சி என்ற எண்ணம் நிலவுகிறது. இதுமுற்றிலும் தவறான எண்ணம்.இதில் உண்மை இல்லை என்று பலமுறை கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்வதற்கான சூழல் இல்லை. எனினும் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜகவின் நிலை மாறியுள்ளது. பாஜக நிமிர்ந்துள்ளது. விமர்சனங்களுக்கு நின்று பதில் சொல்லக் கூடிய நிலைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பெரிய மாறுதல்கள் நடந்துள்ளன. பல முன்னேறிய நாடுகளைக் காட்டிலும் இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டாண்டு கரோனா தாக்கம், ரஷ்யா – உக்ரைன் போர் இவற்றுக்கிடையே நாம் எப்படி முன்னால் நிற்கிறோம் என்று உலக வங்கி உட்பட பல அமைப்புகள் சொல்கின்றனர். கரோனா பெருந்தொற்று பாதிப்பிற்குப் பிறகு கூட வேகமாக வளரும் நாடு இந்தியா எனச் சர்வதேச நிதியம் கூறி உள்ளது.
கரோனா பாதிப்பு இருந்த சமயத்தில் தடுப்பூசி அவநம்பிக்கையும் ,தயக்கத்தையும் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை போட்டுக் கொண்டார்களா அல்லது வெளிநாட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பதை இதுவரை வெளிப்படையாகக் கூறவில்லை. பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இன்றுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்று எனக்குத் தெரியாது. தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இல்லாமல் காங்கிரஸார் விமர்சித்து கொண்டிருந்தனர். இது எங்களுக்கு வருத்தம் கொடுத்தது. காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு எதிராகப் போராடும், நாட்டை உடைக்கும் கட்சிகளுடன் கைகோர்த்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த ஆண்டுகளில் எப்போதும் தவறுகளை இழைத்துள்ளது. சீனா அசாமை தாக்கியபோது நேரு அம்மக்களை கைவிட்டார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எமர்ஜென்சி தவறில்லையா… ஏழைகளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சி நடக்கவில்லை.
பட்டியலின மக்களுக்கு அரசியலில் உரிய அதிகாரத்தையும் , பதவியையும் பாஜக அளித்துள்ளது. பழங்குடி இன மக்களுக்கு எதிராகச் செயல்படும் கட்சியாகவே காங்கிரஸ் உள்ளது. நாட்டில் இப்போது ஒவ்வொரு மாதமும் 36 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகின்றன. மின்சாரம் பாகுப்பாடின்றி அனைவருக்கும் சென்றடைந்துள்ளது. மல்லையா, நீரவ் மோடி ஆகியோரின் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே வங்கிகள் ஆரோக்கியமாக இயங்குகின்றனர். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை சாமானிய மக்களிடமும் பாஜக அரசு கொண்டு சென்றுள்ளது. இதை எல்லாம் பார்த்து வெளிநாட்டினர் ஆச்சரியப்படுகின்றனர்.
சோசியலிசம் என்ற பெயரில் ஆட்சி செய்த காங்கிரஸ் 60 ஆண்டுக் காலம் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை.மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாகவும் மத்திய, மாநில அரசுக்கு இடையே சுமுக உறவில்லை என்றும் இங்கே பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. தமிழகம் அதிக வரி செலுத்துவதால், தமிழ்நாட்டிற்கு அதிக அதிக திட்டங்களைத் தர வேண்டும் எனத் தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது. பிரிவினைவாத மனநிலை கொண்டதால் தான் இப்படி எல்லாம் பேசுகின்றனர்.
பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாத ஜிஎஸ்டி தொகையில் இருந்து மத்திய அரசின் பங்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டும். மிக விரைவில் அதுவும் வழங்கப்படும். ஒரு மாநிலத்தின் மொழியை அடுத்த மாநிலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அனைத்து மொழிகளையும் கற்று கொள்வதற்கான முயற்சியை செய்யுங்கள்.
இந்தி திணிப்பை பற்றி சொன்னார்கள் இந்தியை யாரும் திணிக்கவில்லை. நான் ஜேஎன்யூவில் படித்த காலத்தில் அங்கு கற்றுக் கொண்ட இந்தியை வைத்துதான் பிழைத்து கொண்டிருக்கிறேன். இந்தியை கற்றுக் கொள்ளாதே என்று என் மீது திணித்ததன் காரணமாக நாடாளுமன்றத்தின் எழுந்து நின்று என்னால் இந்தியில் பேச முடியவில்லை. இதனை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இந்தி கற்றுக் கொண்டிருந்தால் தமிழக விஷயங்களை நாடாளுமன்றத்தில் இன்னும் தெளிவாகக் கூறி இருக்கலாம். முடியவில்லையே.. உங்களுடைய திராவிட இயக்கம் மூலமாக எங்களது தனிமனித அதிகாரத்தை குறைத்தால்.அது நல்லதல்ல.என்னுடைய தமிழ் பற்றை யாரும் கேள்வி கேட்கமுடியாது. நான் என் தாய் மொழியை மறக்கவில்லை. வெறுப்புணர்வை விதைக்காதீர்கள். மலையாளிகள் இந்தி கற்று கொள்ளமாட்டோம் என்று சொல்லவில்லை.
கரோனா காலத்தில் மோடி பிரதமராக இல்லாவிட்டால் நாடு என்ன ஆகி இருக்கும் என்று நான் நிச்சயம் கவலை கொண்டிருந்திருப்பேன். மோடி பிரதமராக இருந்ததன் காரணத்தால்தான் நாம் நெருக்கடியிலிருந்து வெளியே வந்துள்ளோம்.பாஜக தமிழகத்துக்கு நல்லது செய்யும்.தமிழகத்தில் விரைவில் பாஜக ஆட்சி அமைய வேண்டும்.இதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.