கோவில்பட்டி: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ‘கடல்சார் உணவு பொருட்களில் தொழில் முனைதல்’ குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.சுகுமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் இரா.சாந்தகுமார் வரவேற்றார். இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி பொதுமேலாளர் ரவீந்திரன் விளக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.பேசியதாவது: கடல் உணவு உலகஅளவில மிக முக்கியமான பொருளாதாரத்தை உருவாக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. 1990-ம் ஆண்டுமுதல் 2018-ம் ஆண்டு வரை 122 மடங்கு கடல் உணவு சந்தைவிரிவாகியுள்ளது. மதிப்புக்கூட்டப்பட்ட கடல் உணவு சந்தையில் பெரிய கடற்கரையைக் கொண்டுள்ள தமிழகத்தின் பங்களிப்பு வெறும் 4.8 சதவீதம் மட்டுமே. கடல்உணவு சந்தையை பெருக்குவதற்கான வாய்ப்பு நம்மிடம் அதிகம் உள்ளது. கடல் உணவு சார்ந்த தொழில்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட வேண்டும்.
அனைத்து வளர்ச்சியும் சென்னையை நோக்கி இல்லாமல், மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என, முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடி அருகே செக்காரக்குடியில் உணவு பூங்கா தொடங்கப்பட்டது. 10 ஆண்டுகளாக அந்த பூங்கா வளர்ச்சி பெறாமல் உள்ளது. இளைஞர்கள் தொழில் தொடங்க முடிவு செய்தால் அந்த இடத்தை தேர்வு செய்யலாம் என்றார்.
அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். கோவில்பட்டியில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை வகித்தார். சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா வரவேற்றார். சென்னை அப்போலோ புரொட்டான் கேன்சர் சென்டர் இயக்குநர் ஹர்ஷத் ரெட்டி திட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.
முகாமை, கனிமொழி எம்.பி.தொடங்கி வைத்து பேசினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் சிறப்புரையாற்றினார். கோட் டாட்சியர் சங்கரநாராயணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, நகர்மன்ற ஆணையர் ஓ.ராஜாராம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் கலந்துகொண்டனர்.