சிம்புவுக்கு ‘மாநாடு’ ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனை எங்கு படமாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது படக்குழு. இதுவரை முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அந்தக் காட்சிகளைப் பார்த்துவிட்டு சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“நான் பார்த்தவரைக்கும் ‘மாநாடு’ படம் சிம்புவுக்கும், வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்”.

இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.