துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ள அஜித்துக்குத் துணை முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 900க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள்.
60க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. சென்னை ரைஃபிள் கிளப், மதுரை ரைஃபிள் கிளப், கோயம்புத்தூர் ரைஃபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன. இதில் சென்னை ரைஃபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைஃபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் 6 பதக்கங்களை வென்றார். அவருக்கு கிளப்பின் இதர உறுப்பினர்கள் தங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
அஜித் 6 பதக்கங்கள் வென்றிருப்பதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஜித்துக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச் சகோதரர் அஜித் குமார் சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்”.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.