தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரியை நிறுவன அதிகாரிகள் தேவைப்படும் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில், திரவ மற்றும் வாயு நிலையிலான ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. நேற்று வரை 500 டன் உற்பத்தியாகியுள்ளது.

இதுகுறித்து, ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் விநியோகம், 500 டன் என்ற மைல் கல்லை நேற்று எட்டியது. இதுவரை 542.92 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனும், தலா 10 கிலோ எடை கொண்ட 265 ஆக்சிஜன் வாயு சிலிண்டர்களும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இங்கிருந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம் ஆகிய 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. மக்களுக்கு உதவ எங்களது வசதிகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மைல்கல்லை எட்டுவதற்கு உதவிய மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.