கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மழைநீர் பாதிப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கனமழையால் இயல்பு வாழ்க்கை மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆகையால் இந்த 4 மாவட்டங்களிலும் முதல்வரின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துவதற்கு 15 நாட்கள் கால அவகாசம் நீட்டித்து வழங்கப்படுகிறது. இதுகுறித்த உத்தரவுகள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.
சென்னையைப் பொறுத்தவரை நேற்று மட்டும் 1757 ஃபீடர்களில் 71 ஃபீடர்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. அதில் இரவு முழுவதும் 4000 மின் ஊழியர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுப்பட்டனர். இப்போது 47 ஃபீடர்கள் சரி செய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ள 24 ஃபீடர்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகின்றன.
அதேபோல், 66,000 மின் இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு தற்போது 38,000 இணைப்புதாரர்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் 28,000 இணைப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 2015 ,2016 ஆண்டுகளில் தடைபட்ட மின்சாரம் இரண்டு வார காலத்திற்கு பிறகே சரி செய்யப்பட்டது ஆனால், தற்போது மழை நின்ற உடன் மின்சாரம் சீர்செய்யப்பட்டு வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழை பாதிப்பால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது இதனை ஈடு செய்யும் விதமாக தூத்துக்குடி, மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.