தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 13-வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசுகையில், கல்வியை வேறு வடிவில் அணுகத் தயாராக வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும். தயவு செய்து தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளுங்கள் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஆளுநர் பேசியதற்கு உயர்கல்விதுறை  அமைச்சர் பொன்முடி பதிலளித்து பேசியுள்ளார். சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிய கல்வி கொள்கையை முழுமையாக படித்த பின்னரே தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என ஆளுநர் கூறிய நிலையில், மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என நம்புகிறோம் என தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் உரையாற்றிய அமைச்சர் பொன்முடி, புதிய கல்விக்கொள்கையில் 3,5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு பொதுத்தேர்வு கொண்டு வந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும் என கூறினார். புதிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்களை நன்று படித்துப் புரிந்து கொண்ட பிறகுதான் அதுகுறித்து பேசி வருவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.