புதுடெல்லி: காணொலி காட்சி மூலம் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ‘ஐ2யு2’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நாடுகளின் அமைப்பானது, நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீட்டினை ஊக்கப்படுத்தும் திட்டங்களை உருவாக்கும். அதன்படி இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு காணொலி காட்சி வழியாக நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் வர்த்தகம், முதலீடுகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும், பிற பொதுவான விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள் என்று இந்திய வெளியுறவு வட்டார தகவல்கள் கூறுகின்றன.