சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த விமானத்தில் பயணித்தவர்களிடம் இருந்து 7.7 கிலோ கடத்தல் தங்க நகைகளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 9-ம் தேதி இரவு கோவையில் தரையிறங்கிய விமானத்தில் வந்த பயணிகள் சிலரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர்.
20 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், உள்ளாடை, பேன்ட் பாக்கெட் மற்றும் அவர்களது பைகளில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட கடத்தல் தங்க செயின்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 7.7 கிலோ எடையளவு கொண்ட கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.4.11 கோடியாகும். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.