தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மதுரை மாவட்டம் தவிர 37 மாவட்டங்களில் இயல்பான அளவும், அதைத் தாண்டியும் மழை பதிவாகியுள்ளது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
11 அணைகள் நிரம்பின
தமிழகத்தில் உள்ள முக்கியமான 15 அணைகளில் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, வைகை, பாபநாசம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, பரம்பிக்குளம், ஆழியாறு, சோலையாறு ஆகிய 11 அணைகள் நிரம்பிவிட்டன. 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை 141.30அடியை எட்டியுள்ளது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 93.25 அடியும், 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் 99 அடியும், 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 54.77 அடியும் நீர்மட்டம் உள்ளது.
தமிழகம் முழுவதும் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 14 ஆயிரத்து 138 பாசன ஏரிகள் உள்ளன. இவற்றில் இதுவரை 6,990 ஏரிகள் நிரம்பிவிட்டன. 3,218 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளன.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, வீராணம் ஆகிய 6 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 13.213 டிஎம்சி. இதில் தற்போது 10.086 டிஎம்சி நீ்ர் இருப்பு உள்ளது. இது 76.33 சதவீதம் ஆகும்.
தமிழகம் முழுவதும் உள்ளமேட்டூர் உள்ளிட்ட அணைகள், சென்னைக்கு குடிநீர் வழங்கும்ஏரிகள் உள்ளிட்ட 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 2,24,297 மில்லியன் கனஅடி (224.297 டிஎம்சி). நேற்றைய நிலவரப்படி தற்போது 2,05,585 மில்லியன் கனஅடி (205.585 டிஎம்சி) நீர்இருப்பு உள்ளது. இது 91.66 சதவீதம் ஆகும் என்று நீர்வள ஆதாரத் துறை தெரிவித்துள்ளது.