ரஷ்யா உடனான உறவில் இந்தியா ராஜதந்திரக் கயிற்றுப் பாலமாக உள்ளதாக திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். இதை அவர் மக்களவையில் நடைபெற்ற உக்ரைன் மீதான விவாதத்தில் பேசும்போது தெரிவித்தார்.
மக்களவையில் இன்று உக்ரைன் நாட்டின் நிலவரம் தொடர்பாக விதி எண் 193-ன் கீழ் நடைபெற்ற விவாதத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. பேசியது: “உக்ரைனில் இருந்து வரும் படங்கள் நம்மை உலுக்குகின்றன. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கட்டிடங்கள் தாக்கப்படுகின்றன. நமது சொந்த மக்கள், மாணவர்கள் உயிர்பிழைக்க எல்லைக்கு தப்பி ஓடுகிறார்கள். சமீபத்தில் 410 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்ட காட்சிகள் வந்தன. நாங்கள் மனம் உடைந்து போனோம். போர் என்பது அகராதியில் இருந்து ஒழிக்கப்படவேண்டிய ஒரு வார்த்தை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உணவு உற்பத்தியில் பெரிய நாடான உக்ரைனுக்கும், அதிக எரிவாயு ஏற்றுமதி செய்யும் ரஷியாவுக்கும் இடையே நேர்மையான மத்தியஸ்தராக இருக்க வேண்டிய தார்மீக பொறுப்பை ஏற்றிருக்கிறது.
மேற்கத்திய நாடுகள் நம்மை ஊமைப் பார்வையாளன் என்று குறிப்பிடலாம். ஆனால், ரஷ்யா உடனான உறவுடன் ஒரு ராஜதந்திர கயிற்றுப்பால நடையை கடைப்பிடிக்கிறோம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது ஒரு பக்கம். அமெரிக்காவுடனான குவாட் கூட்டணி மறுபக்கம். ஒரு நேர்மையான மத்தியஸ்தர் என்ற பாத்திரத்தை நாம் அலங்கரிக்க வேண்டும் என உலகம் எதிர்நோக்குகிறது.
நமது பிரதமர் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை மருத்துவக் கல்வியில் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மாநில அரசுகள் கொள்கைகளை உருவாக்க முடியாதா என்றும் வினவியுள்ளார். மருத்துவக் கல்லூரிகளை நிறுவ கூடுதலான நிலங்களை மாநில அரசுகள் ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இது நலிந்த பிரிவு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
நீட் தேர்வை தமிழகம் கடுமையாக எதிர்க்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள். ஆனால் 562 கல்லூரிகளில் 88,120 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். அதனால்தான் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் வெளிநாடு செல்கிறார்கள். எனவேதான் நீட்டை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பவர்கள் ஒரே பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்க வேண்டும். ஆனால், இப்போது இந்திய மாணவர்கள் சிக்கலை எதிர்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று இந்தியா சர்வேதேச தனிமையில் நிற்கிறது. நேருவின் அணிசேரா கொள்கையில் இருந்து வெகுதூரம் வந்துவிட்டது. வெளிவிவகாரங்களில் அணி சேராமை, கட்சி சார்பற்ற மதச்சார்பின்மை பற்றிய அவரது யோசனையை மறந்து விட்டது. ஆனால், இந்தியா பஞ்சசீலக் கொள்கைகளை அதிகாரபூர்வமாக நிராகரிக்கவில்லை. ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன், சுதந்திரமான உக்ரைன் இல்லாமல் சுதந்திரமான, பாதுகாப்பான ஐரோப்பா இருக்க முடியாது” என்று அவர் பேசினார்.