திருவண்ணாமலை: “தமிழகத்தில் எதிர்க்கட்சிக்கான இடத்தைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்கிறது” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
திருவண்ணாமலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் தினகரன் கூறும்போது, “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதைப்பற்றி இப்போது பேசுவதே இல்லை. முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆட்சியில் சொத்து வரியை உயர்த்தியபோது போராட்டம் நடத்தியவர்தான் ஸ்டாலின். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்த பிறகுதான் சொத்து வரி உயர்வை பற்றி சிந்திப்போம் என்றார். ஆனால், முகத்தில் இருந்து முகக்கவசத்தை கழற்றியதும், சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியுள்ளார். ஸ்டாலின் நடவடிக்கைகளை பார்க்கும்போது ஹிட்லர் பாணியில் உள்ளது.
பேரறிவாளன் விடுதலைக்கு திமுக தான் காரணம் என்பது போல் கூறி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அதற்கு பிள்ளையார் சூழி போடப்பட்டது. பழனிசாமி ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்களும் போராடி விடுதலை பெற்றிருக்கலாம். ஆனால், பெரிய சாதனையாக சித்தரிக்கின்றனர். தனக்காக குரல் கொடுத்தவர்களை நேரில் சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவிக்கிறார். அதில் திமுக அரசியல் செய்கிறது.
தமிழகத்தில் மீண்டும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. விடியல் ஆட்சியில் இருண்ட தமிழகம் உருவாகி உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர். ஏழை எளிய மக்கள், தொழிலாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்த அம்மா உணவகங்களை மூடுகின்றனர். நகைக் கடன் தள்ளுபடி செய்யவில்லை என போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர முடியாது என்கின்றனர். நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
தமிழகத்தில் பாஜகவினர் வந்துவிடுவார்கள் என கூறி சிறுபான்மை மக்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி வருகின்றனர். எதிர்காலத்தில் திமுக பெரிய தோல்விகளையும், வீழ்ச்சியையும் சந்திக்கும்.
தமிழக மக்களின் சோதனைதான் திமுகவின் சாதனையாகும். திமுகவும், அக்கட்சியினரும் செழிப்பாக உள்ளனர். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மடியில் கனம் இருப்பதால், வழியில் பயம் ஏற்பட்டுள்ளது. அடிப்பது போல் அடித்துவிட்டு அமைதியாக இருப்பதாக மக்களிடம் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது. இது, எதிர்க்கட்சியின் தவறான செயல்பாடாகும். தமிழகத்தில் எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடிக்க பாஜக முயற்சி செய்கிறது.
உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்துவந்த மாணவர்களின் கல்வி தொடர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பால், சமையல் காஸ் விலை உயர்வு என்பது, வாக்களித்த மக்களுக்கு கொடுக்கும் பரிசு என்கிற தண்டனையாகும். விலைவாசியை கட்டுக்குள் வைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.
பதிலளிக்க மறுப்பு: அதிமுக – அமமுக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என்ற யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது. அரசியலில் இப்படி நடக்கும், அப்படி நடக்கும் என சொல்ல நான் ஞானியோ, ஜோதிடரோ இல்லை. தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் அமமுகவை பாதிக்காது. எந்த நோக்கத்துக்காக இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதோ, அதனை அடைவதற்காக நாங்கள் போராடுவோம். எதிர்காலத்தில் தமிழக மக்கள் எங்களுக்கு வெற்றியை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது”என்றார். தொடர்ந்து வி.கே.சசிகலாவின் ஆன்மிக சுற்று பயணம் குறித்த கேள்விக்கு டிடிவி தினகரன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.