சென்னை: சென்னை மாநகராட்சியை அனைத்து வசதிகளிலும் மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நட்புமிகு சென்னை, பசுமை சென்னை, தூய்மை சென்னை, நீர் மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியில் சென்னை, சீர் மிகு சென்னை, கலாசாரம் மிகு சென்னை உள்ளிட்டவை மூலம் சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

குறிப்பாக பசுமை சென்னை, தூய்மை சென்னை உள்ளிட்ட முயற்சிகள் மூலம் சென்னை மாநகராட்சியை அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

 

இதன்படி இயற்கை பரப்புகளை அதிகரித்தல், சுவர்களின் வண்ணம் தீட்டுதல், பாலங்களுக்கு கீழ் பகுதிகளை சீரமைத்தல், செயற்கை நீருற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

நான்கு திசைகளிலும் சென்னை மாநகராட்சியில் நுழைவு வாயில்களாக உள்ள பகுதிகளை அழகுப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுவருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி குறித்து ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறுகையில், “கோயம்பேடு பேருந்து நிலைம், விமான நிலையம், எழும்பூர் ரயில், சென்டரல் ரயில் நிலையம் ஆகியவைதான் சென்னையில் நுழைவு வாயிலாக உள்ளது. இவற்றை அழகுபடுத்தும் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் முன்பு உள்ள சாலையில் நடுப்பகுதி செடிகள் நட்டு அழபடுத்தப்பட்டுள்ளது. மேலும், செயற்கை நீருற்றுகளும் எழும்பூர் ரயில் நிலையம் முன்பு உருவாக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் முன்பு மற்றும் அருகில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. சாலையில் நடுவில் செடிகள் நடப்பட்டுவருகிறது. இதைப்போன்று அசோக் பில்லர் முதல் கோயம்பேடு வரை உள்ள சாலைகளில் நடுவில் செடிகள் நடும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

இதைத் தவிர்த்து சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 26 செயற்கை நீரூற்றுகள் அமைக்க சென்னை மாநகராட்சி ரூ.1.29 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது. இதில் தலைமைச் செயலகம் முன்பு உள்ள பூங்கா, அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளசா சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் நீருற்றுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள சாலைகளின் பெயர் பலகை அனைத்தும் சிங்கார சென்னை 2.0 திட்ட இலட்சினை உடன் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.8.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் வசதிக்காக பூங்கா மற்றம் விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணியையும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் தற்போது 718 பூங்காக்கள் மற்றும் 163 சாலையோர பூங்காக்கள் உள்ளன. கூடுதலாக ரூ.100 கோடியில் 150 பூங்கா மற்றும் 50 விளையாட்டுத் திடல்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 18 விளையாட்டு திடல்களை மேம்படும் பணி ரூ.12.57 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.